Published : 28 Oct 2022 06:40 PM
Last Updated : 28 Oct 2022 06:40 PM
ரியாத்: சீன அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது குறித்து சவுதி இளவரசர் பைசல் பின் ஃபர்கான் தொலைகாட்சியில் பேசும்போது, “சீனாவுடன் வரலாற்று ரீதியான உறவு உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு முன்னர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பு முக்கியமானதாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜி ஜின்பிங் உடனான சந்திப்பை சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. சீனாவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா செய்து வருவதாகவும் சவுதி வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சீன அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றப் பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணமாக இது அமையவுள்ளது என்று அரபு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தப் பயணம் குறித்து சீனா தரப்பில் இதுவரை கருத்து தெரிவிக்கப்படவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் இறுதியில் பத்திரிகையாளர் கஷோகி மரணம் குறித்து ஜோ பைடன் கருத்து தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவும், கச்சா எண்ணெய் விவகாரம் காரணமாகவும் அமெரிக்கா - சவுதி உறவில் சற்று விரிசல் நீடிக்கிறது. சீனாவுக்கும் - அமெரிக்காவுக்கு இடையேயும் வர்த்தகம் சார்ந்து நீண்ட காலமாக பனிப்போர் நிகழ்கிறது. இந்த நிலையில், ஜி ஜின்பிங்கின் சவுதிப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT