Published : 28 Oct 2022 05:25 AM
Last Updated : 28 Oct 2022 05:25 AM
மாஸ்கோ: ரஷ்ய-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், திடீரென ரஷ்ய ராணுவம் அணு ஆயுதப் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. அதிபர் விளாடிமிர் புதின் காணொலி மூலம் இதை ஆய்வு செய்தார்.
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் அணுசக்தி அமைப்பு, அணுக்கழிவுகளைப் பயன்படுத்தி நாசகார குண்டுகளைத் தயாரித்து இருப்பதாகவும், அதன் மூலம் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
அணுக்கழிவு குண்டு வெடித்துச் சிதறினால், மனிதர்களுக்குப் புற்றுநோய், மூளை பாதிப்பு, மோசமான தோல் நோய்கள் ஏற்படும். ஒருவேளை உக்ரைன் ராணுவம் அணுக்கழிவு குண்டு தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, ரஷ்ய ராணுவம் கடந்த சில நாட்களாக அணு ஆயுதப் போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இதன்படி, பல்வேறு ராணுவ முகாம்கள், நீர்மூழ்கிகள் மற்றும் போர் விமானங்களில் இருந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகள் சோதனை செய்யப்படுகின்றன.
அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக அணு ஆயுதப் போர் ஒத்திகையைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தற்போதைய சூழலில், ரஷ்யா-உக்ரைன் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது அணுகுண்டு வீசப்பட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் பாதிப்பு ஏற்படும். அப்போது, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நேரடியாகப் போரில் இறங்கும். இதற்கிடையில், பேரழிவைத் தடுக்க உக்ரைன் போருக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
"எந்தச் சூழ்நிலையிலும் ரஷ்யாவும்-உக்ரைனும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது" என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சில நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்கா எச்சரிக்கை: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் கூறும்போது, “உக்ரைன் அணுசக்தி துறை, அணுக்கழிவு மூலம் நாசகார குண்டை தயாரித்திருப்பதாகரஷ்யா வதந்திகளைப் பரப்பி வருகிறது. இதன்மூலம், போரைத் தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். தற்போதைய சூழ்நிலை மிகுந்த கவலையளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இதேபோல, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT