Published : 27 Oct 2022 06:37 AM
Last Updated : 27 Oct 2022 06:37 AM

சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் கரோனா பரவல்

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில்தான் முதல் முதலாக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன் பிறகு உலகம் முழுவதும் அந்த வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டது.

கரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட வூஹான்நகரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் பரவலை முற்றிலும் ஒழிக்க சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘முழு கரோனா தடுப்பு’ என்ற கொள்கையை அறிவித்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது வூஹான் நகரில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த நகரை சுற்றிய பல இடங்களில் தீவிர பொது முடக்கத்தை சீனா அறிவித்துள்ளது.

ஹன்யங் மாவட்டத்தில் உள்ள 9 லட்சம் குடும்பங்கள் புதன்கிழமையிலிருந்து வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அத்தியாவசியமில்லாத கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட், மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்திக்கான முக்கிய தலமான ஷான்ஸிமாகாணத்தின் டடோங், குவாங்ஸு உள்ளிட்ட நகரங்களிலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x