Published : 26 Oct 2022 07:01 AM
Last Updated : 26 Oct 2022 07:01 AM

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வழியில் ரிஷி சுனக்..

கடந்த 1971-ம் ஆண்டில் ரிஷி சுனக்கின் தந்தை யாஷ் மற்றும் அவரது தாத்தா ராம்தாஸ் சுனக் ஆகியோர் இணைந்து தென்மேற்கு லண்டனின் சவுதாம்டன் நகரில் இந்து கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். ரிஷி சுனக் இந்த கோயிலுக்கு சென்று உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்த கோயிலின் தலைவர் சஞ்சய் சந்தரனா கூறியிருப்பதாவது:

இங்கிலாந்து வரலாற்றில் வெள்ளை இனத்தை சாராத ஒருவர் பிரதமராக பதவியேற்பது இதுவே முதல் முறை. கருப்பினத்தைச் சார்ந்த பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகி சாதனை படைத்தது போலவே இதுவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணமாகும். அதேபோன்று, இந்திய வம்சாவளி பின்புலத்துடன் இந்து ஒருவர் இங்கிலாந்து பிரதமராகி சாதனை படைப்பதும் இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெங்களூருவில் ரிஷி - அக்ஷதா திருமணம்

இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான என்.ஆர். நாராயண மூர்த்தியின் மூத்த மகள் அக்ஷதா மூர்த்தி. இவரும், ரிஷி சுனக்கும் அமெரிக்காவின் ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ., படித்தனர். அப்போது அக்ஷதாவை காதலித்துள்ளார் ரிஷி. அவர் தனக்கு பொருத்தமானவர் என்பதை அறிந்ததும் ரிஷி சுனக் காதலை அக்ஷதா ஏற்றுள்ளார். இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களின் சம்மதம் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களது திருமணம் பெங்களூருவில் 3 நாட்கள் கோலாகலமாக நடந்தது.

முதல் நாள் மெஹந்தி நிகழ்ச்சி. அடுத்தாநாள் மாப்பிள்ளை அழைப்பு. கன்னட பாரம்பரிய விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2009 ஆகஸ்ட் 30-ம் தேதி லீலா பேலஸ் ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம். அன்று மாலை நடந்த பிரம்மாண்ட வரேவேற்பு நிகழ்ச்சியில், பிரபல தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அக்ஷதாவுக்கு ரூ.126.6 கோடி டிவிடெண்ட்

இன்போசிஸ் நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியிருப்பதாவது:

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷதா மூர்த்திக்கு செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி இன்போசிஸ் நிறுவனத்தில் 3.89 கோடி பங்குகள் (0.93 சதவீதம்) உள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் பங்கின் விலை ரூ.1,527.40-ஆக இருந்தது. அதன்அடிப்படையில் கணக்கிடுகையில் அக்ஷதா மூர்த்தியிடம் ரூ.5,956 கோடி மதிப்புக்கு பங்குகள் உள்ளன. நடப்பாண்டில் டிவிடெண்ட் வருவாயாக அவருக்கு ரூ.126.61 கோடி (15.3 மில்லியன் டாலர்) வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கு இறுதி டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.16 பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதம் இடைக்கால டிவிடெண்டாக ரூ.16.5 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பங்கு ஒன்றுக்கு ரூ.32.5 என்பதன் அடிப்படையில் 3.82 கோடி பங்குகளுக்கான ரூ.126.61 கோடி டிவிடெண்ட் அவருக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x