Published : 26 Oct 2022 07:11 AM
Last Updated : 26 Oct 2022 07:11 AM
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் சந்தை, விநியோக சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்தும் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்றே முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் முயற்சி செய்தார். மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளை பாராட்டுகிறேன். ஆனால் சிலதவறுகளால் மோசமான விளைவுகள் ஏற்பட்டன. அந்த தவறுகளை நான் சரி செய்வேன்.
இதற்காக கடுமையான கட்டுப்பாடுகள், நடைமுறைகள் அமல் செய்யப்படும் என்று அஞ்ச வேண்டாம். கரோனா காலத்தில் நாட்டின் நிதியமைச்சராக நான் எவ்வாறு பணியாற்றினேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
மக்களின் நலன், வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டே அரசின் செயல்பாடுகள் இருக்கும். நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பேன். எனது தலைமையிலான அரசு உங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளின் வளர்ச்சியையும் உறுதி செய்யும்.
நாட்டை ஒன்றிணைப்பேன். வெறும் வார்த்தைகளால் அல்ல. செயல்பாடுகளால் நாட்டை ஒன்றிணைப்பேன். இரவு, பகலாக உங்களுக்காக உழைப்பேன். அரசு துறைகளின் ஒவ்வொரு நிலையிலும் நிபுணத்துவம், திறமை வெளிப்படும். கன்சர்வேட்டிவ் கட்சியினரின் நம்பிக்கையை பெற்றுள்ளேன். அடுத்து மக்களின் நம்பிக்கையையும் பெறுவேன்.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் சாதனைகளை இப்போது நினைவுகூர்கிறேன். அவரது சாதனைகள், பெருந்தன்மைக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
வளமான எதிர்காலம்
கடந்த 2019-ம் ஆண்டில் கன்சர்வேட்டிவ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். சுகாதார கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். சிறப்புபள்ளிகள், பாதுகாப்பான சாலைகள் உறுதி செய்யப்படும். சுற்றுச்சூழல் பேணிக் காக்கப்படும். நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்படும்.
பாதுகாப்பு படைகளுக்கு முழுஆதரவு அளிக்கப்படும். முதலீடு, புதுமையான திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும். பிரெக்ஸிட்டால்கிடைத்த வாய்ப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
வளமான எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவேன். அரசியலை தாண்டி மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பேன். நான் ஒன்றிணைந்து செயல்பட்டு புதிய சாதனைகளைப் படைப்போம். புதிய நம்பிக்கையோடு பயணத்தை தொடங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...