Published : 25 Oct 2022 05:29 PM
Last Updated : 25 Oct 2022 05:29 PM
லண்டன்: இங்கிலாந்தின் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் இங்கிலாந்தின் மிக இளம் வயது பிரதமர் எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில், ரிஷி சுனக் மீதான எதிர்பார்ப்பு குறித்தும், அவர் முன் காத்திருக்கும் பல்வேறு சவால்கள் குறித்தும் தற்போது பார்ப்போம்.
பொருளாதார குழப்பம்: இங்கிலாந்தின் பொருளாதாரம் கடும் சரிவில் இருந்து வருகிறது. அதன் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் சராசரி வருவாய் உயர்வோடு ஒப்பிடுகையில், பொருட்களின் விலை உயர்வு அதிகமாக உள்ளதால் மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்கள் தங்களின் செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை ரிஷி சுனக் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பது இங்கிலாந்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதோடு, அடுத்த ஆண்டுக்கான இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.30 சதவீதமாக இருக்கும் என ஐ.எம்.எஃப் மதிப்பிட்டுள்ளது. இதனை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை ரிஷி சுனக் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வரி குறைப்பு: இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. பெரு நிறுவனங்கள் வரி குறைப்பை வலியுறுத்தி வருகின்றன. வரி குறைப்பு தொடர்பாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை கன்சர்வேடிவ் கட்சி அமல்படுத்த வேண்டும் என்று பெரு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. அதேநேரத்தில், பெரு நிறுவனங்களிடம் அதிக வரி வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு இருப்பதாகக் கூறும் பொருளாதார நிபுணர்கள், பெரு நிறுவனங்களுக்கு வரியை அரசு குறைக்கக்கூடாது என வலியுறுத்துகின்றனர். அப்போதுதான், அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி உயர்வை தவிர்க்க / குறைக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். வரியை உயர்த்தினாலும் பிரச்சினை; வரியை உயர்த்தாவிட்டாலும் சிக்கல் எனும் சூழலில், இது விஷயத்தில் ரிஷி சுனக் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலைவாய்ப்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக முதலீடுகள் குறைந்துள்ளதால், புதிய வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அதோடு, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களில் பெரும் சதவீதத்தினர் பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் பணியாற்றி வருகின்றனர். வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்றும், வருமான வரியை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு பணியாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்குவதன் மூலமே, பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனும் நிலையில், வேலைவாய்ப்பைப் பெருக்க ரிஷி சுனக் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரசியல் நிலைத்தன்மை: கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கன்சர்வேடிவ் கட்சிக்கு ஏறக்குறைய இன்னும் 2 ஆண்டுகள் பதவியில் இருக்க வாய்ப்புள்ளது. பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. எனினும், வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படாததால் கன்சர்வேட்டிவ் கட்சி கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. அதோடு, போரிஸ் ஜான்சனின் பதவி விலகலை அடுத்து பிரதமரான லிஸ் ட்ரஸ், 50 நாட்களுக்குள் பதவியை ராஜினாமா செய்தது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என்பதால் பதவி விலகுவதாக லிஸ் ட்ரஸ் கூறியது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 14 சதவீத ஆதரவே இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போதைய சூழலில் தேர்தல் வந்தால் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எளிதில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் நிலையான அரசை கொடுக்க வேண்டிய கட்டாயம் ரிஷி சுனக்கிற்கு ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கையை காப்பாற்றுவதற்கான பொறுப்பு: நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்வதற்கான அனைத்து திட்டங்களும் தன்னிடம் உள்ளதாக ரிஷி சுனக் கூறி இருக்கிறார். மேலும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால், ரிஷி சுனக் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம் ரிஷி சுனக்கிற்கு ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால், கடந்த 2010-ல் இருந்து ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சியிடம் ஆட்சியை இழக்க நேரிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...