Published : 25 Oct 2022 01:48 PM
Last Updated : 25 Oct 2022 01:48 PM
உலக நாடுகளின் அமைதி தூதுவனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இன்று சிறப்பான நாள். ஆம்... ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டு 77 ஆண்டுகள் முடிவடைந்திருக்கிறது. போர்ப் பதற்றம், மனித உரிமை மீறல், ஆயுதங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளின்போது உரிய நடவடிக்கைகளை எடுத்தல், உலக அமைதியைப் பேணுதல், நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துதல், பாலின சமத்துவத்தை உண்டாக்கல், நாடுகளிடையே நட்புறவுகளை வளப்பதற்காக 1945-ஆம் ஆண்டு இதே நாளில் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது.
உலக நாடுகளிடையே போரை நிறுத்துவதற்காக பிரதானமாக தோற்றுவிக்கப்பட்ட இந்த ஐக்கிய நாடுகள் சபை, தான் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணப் பொருளை நிறைவேற்றி வருகிறதா? இல்லை, பெரிய அண்ணன் மனப்பான்மையில் மேலோட்ட பஞ்சாயித்துகளில் மட்டுமே ஈடுபடுகிறதா? - இதோ ஒரு விரைவுப் பார்வை...
ஐக்கிய நாடுகள் சபை தோற்றம் & செயல்பாடு: முதலாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட உயிர் அழிவுகளைக் கண்டு அச்சம் கொண்ட உலக நாடுகள் அனைத்தும் மனித உயிர்கள்மீது அக்கறை கொண்டு ‘தி நேஷன்ஸ் லீக்’ (The nations league) என்ற சமாதான அமைப்பை 1920-ஆம் ஆண்டு கொண்டு வந்தன. ஆனால், இந்த அமைப்பை ஒருங்கிணைப்பதிலும், வல்லரசு நாடுகளை சமாளிப்பதிலும் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டன. மேலும், சில நாடுகள் ‘The nations league’ அமைப்பை தங்கள் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தும் கருவியாக உபயோகித்த விளைவினால் அந்த அமைப்பு உடைந்து தோல்வி அடைந்தது. ‘The nations league’ அமைப்பின் தோல்வியின் தொடர்ச்சியாக இரண்டாம் உலகம் போர் ஏற்பட்டது. மீண்டும் லட்சக்கணக்கான உயிர் சேதம், பொருளாதார சேதத்தை உலக நாடுகள் எதிர்கொண்டன.
மீண்டும் இம்மாதிரியான கொடூரமான போர்கள் ஏற்படக் கூடாது என்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டின. உலக அமைதிக்கும், பரஸ்பர பாதுகாப்பினை உருவாக்குதல், உலக நாடுகளிடையே நட்பை வளர்ப்பது பொருட்டும், உலக மக்களை இணைக்கும் பொருட்டும் 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரை அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்தான் பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் சபையின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு லண்டனில் கூடியது. ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படையாக 6 அம்சங்கள் உள்ளன. அவை: 1. பொதுச் சபை 2. பாதுகாப்பு சபை 3. சமூகப் பொருளாதார சபை 4. சர்வதேச நீதிமன்றம் 5.பொறுப்பாண்மைக் குழு 6. செயலகம்.
ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அதன் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை கூடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.
ஐ. நா. எதில் சறுக்கியது? - ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டத்திலிருந்து போர் சார்ந்த அதன் தீர்மானங்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களை தடுக்க ஐ. நா. மேற்கொண்ட பல முயற்சிகளும், தீர்மானங்களும் கைக்கொடுக்கவே இல்லை.
எடுத்துக்காட்டுக்கு, 1967-ஆம் ஆண்டு சர்வதேச எதிர்ப்புகளை மீறி பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அடுத்த ஆண்டே சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. சைப்ரஸ் மீதான துருக்கியின் படையெடுப்பு, அமெரிக்க - ஈராக் யுத்தம், ஆப்கான் போர், சிரியா போர், இலங்கை உள்நாட்டுப் போர், அமெரிக்கா - ஈரான் மோதல், அமெரிக்கா - வடகொரியா மோதல், சீனாவின் தொடர் ஆக்கிரமிப்பு, உக்ரைன் - ரஷ்யா போர், மியான்மர் ராணுவ அத்துமீறல் என எதிலும் ஐக்கிய நாடுகள் சபை சமாதானத்தை ஏற்படுத்துவதில் தவறிவிட்டது.
ஆண்டாண்டு காலமாக ஆப்பிரிக்க நாடுகள் மீது நடக்கும் சுரண்டலை ஐ. நா. வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. இவை ஒருபுறம் இருக்க... ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் தலையீட்டால் சில நேரங்களில் ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமாக செயல்படாத முடியாமல் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் சூழலும் நிலவுகின்றது.
ஐ. நா. என்ன சாதித்தது..? - இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகளிடையே பெரிய அளவிலான போர் கடந்த 70 ஆண்டுகளில் ஏற்படவில்லை. அவ்வாறு எடுத்து கொண்டால் ஐ.நா சபை தனது தோற்றத்திற்கான நியாயத்தை சிறிது ஈடு செய்திருக்கிறது. ஐ. நா.வின் பொருளாதாரத் தடைகள் உலக நாடுகளின் மோதலை சற்று குறைத்திருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதியை கொண்டு செல்வதில் ஐ. நா. சபை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதுவும் தொற்று காலங்களில் அதன் சேவை நிச்சயம் பாராட்டுக்குரியது.
ஏவுகணை பரிசோதனை காரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த ஈரானை பேச்சுவார்த்தை மூலம் அணுசக்தி ஓப்பந்தங்களை நிறைவேற ஐ. நா. உதவியது. உலகில் நிலவும் வறுமையை ஒழிப்பதற்கும், பாலின சமத்துவதும் ( 77 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றதில்லை என்பது ஐ. நா.வின் மற்றொரு முரண் ) ஏற்படுவதிலும் ஐ.நா. சபை தொடர்ந்து தீவிர பங்களிப்பை அளித்து வருகிறது. தொடர்ந்து அதிகாரமில்லாத அமைப்பு என ஐ. நா. மீது விமர்சனங்கள் இருந்த போதிலும், உலக நாடுகளிடம் போரை தடுப்பத்திலும், அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் ஐ. நா. சபையின் பங்களிப்பு நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அக்டோபர் 25 - ஐக்கிய நாடுகள் சபை தினம்
தொகுப்பு: இந்து குணசேகர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT