Published : 24 Oct 2022 11:10 PM
Last Updated : 24 Oct 2022 11:10 PM

பிரிட்டனின் புதிய பிரதமர்: யார் இந்த ரிஷி சுனக்?

இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே பிரிட்டன் அரசியல் களம் பரபரப்பு மிகுந்ததாகவே இருந்துவருகிறது. சொல்லப்போனால் இந்தப் பரபரப்பை ஏற்படுத்தியவர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக். அவரே முதலில் போர்க்கொடி தூக்கி போரிஸை ராஜினாமா செய்ய வைத்தார். இதன்பின் லிஸ் ட்ரஸ் பதவிக்கு வந்தது தனிக்கதை.

ஆனால் 45 நாட்களில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை துறக்க, ரிஷி சுனக் போட்டியின்றி அந்த அரியணைக்கு தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக் ஒரு இந்திய வம்சாவளி.

யார் இந்த ரிஷி சுனக்? - ரிஷி சுனக்கின் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அவரது தாத்தா பாட்டி பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர்கள். முதலில் ஆப்பிரிக்காவில் இருந்தவங்க 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தான் ரிஷி பிறந்தார். ஆகையால், பிறப்பிலேயே அவர் இங்கிலாந்து குடிமகனானார். இங்குதான் ரிஷியின் தந்தை மருத்துவராகவும், அவரின் தாய் மருந்துக்கடை ஒன்றையும் நடத்திவந்தனர். இங்கிலாந்தில் பிறந்தாலும் ஆங்கிலம் தவிர, அவருக்கு இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டே வளர்த்தனர் அவர்களின் பெற்றோர்கள்.

மொழிகள் மட்டுமல்ல, இந்திய கலாச்சாரத்தின் ஆணி வேரான மதமும் அவரை பின்பற்ற வைத்துள்ளனர். தன்னை ஒரு பெருமைமிக்க இந்து என்றே பல முறை ரிஷி குறிப்பிட்டுள்ளார். அவர் எம்பி ஆனதும் பகவத் கீதையின் மீது சத்தியப் பிரமாணம் செய்ததே இதற்கு சான்று.

இங்கிலாந்து அரசியல்வாதிகள் பலரும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயில்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதே வழியைப் பின்பற்றி ரிஷியும் தத்துவம் பயின்றார். அடுத்ததாக அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பு. இங்குதான் ரிஷியின் வாழ்வில் மிக முக்கிய தருணம் நிகழ்ந்தது. ஆம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்‌ஷதா மீது காதல் வயப்பட்டு இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் பெங்களூருவில் 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். குடும்பத்துடன் அதிக பிணைப்பை கொண்டவர் ரிஷி. குறிப்பாக தனக்கு பெண் கொடுத்த மாமியார் மாமனார் மீது அதிகம் உண்டு. பலமுறை மேடைகளில் நாராயணமூர்த்தியை நினைத்து நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

அரசியல் வேட்கை: பெருந்தொழிலதிபர் வீட்டின் மருமகனானால் அந்த தொழிலை கையிலெடுக்க வேண்டும் தானே. அது தான் ரிஷிக்கும் நடந்தது. ரிஷி, மனைவி துணையுடன் டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தினார். ஆனாலும் அவருக்குள் அரசியல் ஆசை துளிர்த்துக் கொண்டே இருந்தது. அதனால், கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2014-ல் வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையான ரிச்மாண்டு தொகுதியில் அவருக்கு அபார வெற்றியும் வந்து சேர்ந்தது.

ஆரம்பத்தில் சில ஆண்டுகள் எம்.பியாக இருந்தவர் வீட்டு வசதி, உள்ளாட்சித் துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். காலநிலை மாற்றம் விவகாரத்தில் தெரசா மே பதவி விலக, இங்கிலாந்தின் பிரதமர் ஆனார் போரிஸ் ஜான்சன். அப்போது நடந்த அமைச்சரவை மாற்றத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல செயலரானார் ரிஷி. கிட்டத்தட்ட நிதியமைச்சருக்கு நிகரான பதவி இது.

2019 தேர்தலில் மீண்டும் ரிஷி வெற்றிவாகை சூட, இம்முறை அவருக்கு இணையமைச்சர் பதவி கிடைக்கலாம் என கருதப்பட்டது. எதிர்பாராத திருப்பமாக, போரிஸ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஜாவித் ராஜினாமா செய்ய, ரிஷிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது. இங்கிலாந்து நிதியமைச்சரானார். கரோனா காலம் முன்புவரை ரிஷி சுனக் மீது பொதுவெளியில் நேர்மறையான கருத்தே நிலவியது. இதனால், அடுத்த பிரதமர் ரேஸில் முன்னணியில் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்கலுக்கு முன்பு அவர்மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் இந்த வாய்ப்பை மழுங்கடித்தன.

கரோனா தொற்றுக்குப் பிறகு மற்ற நாடுகளைப் போலவே இங்கிலாந்தின் நிலைமையும் தலைகீழாக மாறியது. நிலைமை இவ்வாறு இருக்க, நிதியமைச்சர் என்ற முறையில் கரோனா தொற்றால் ஏற்பட்ட நிலையை சரிசெய்ய கடந்த பட்ஜெட்டில் இங்கிலாந்தில் புதிய வருமான வரி நிலைகளை அமல்படுத்தினார் ரிஷி சுனக். இங்கே தொடங்கியது அவரின் சரிவு. இந்த வரிநிலை ஆனது 1940-களுக்குப் பிறகு இல்லாத வகையில் இங்கிலாந்தில் வரி செலுத்துபவர்கள் மீது விதிக்கப்பட்ட மிக அதிக அளவு வரிச்சுமை என்கின்றனர் அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள். இது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரிச்சுமைக்கு இடையில் தனது பட்ஜெட்டில் எந்தப் புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாக அவருக்கு எதிரான மனநிலைக்கு வித்திட்டது.

மனைவி அக்‌ஷதாவின் வரி சர்ச்சை: ஒருபுறம் நிதியமைச்சராக மக்கள் மீது பல வரிகளைச் சுமத்திய ரிஷி, அதேவேளையில் தனது மனைவியின் சொத்துக்கான வரியில் கோட்டைவிட்டார். வேலை அல்லது திருமணம் காரணமாக இங்கிலாந்தில் குடிபெயர்பவர்கள் 6 ஆண்டுகளில் அந்நாட்டு குடியுரிமை பெறத் தகுதியானவர்கள். அப்படி குடியுரிமை பெற்றால் தங்களின் வருமானத்துக்கு இங்கிலாந்து நாட்டின் வரி செலுத்த வேண்டும்.

அதேநேரம், இங்கிலாந்தில் வசித்தாலும் பிரிட்டன் குடியுரிமை பெறாமல், Non-Domicile Status எனப்படும் குடியுரிமை இல்லாத அந்தஸ்து பெற்று வசித்தால், இங்கிலாந்தை தாண்டி மற்ற நாடுகளில் பெறும் தங்களின் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசிக்கும் ரிஷி சுனக் மனைவி அக்‌ஷதா, இந்தமுறையை பயன்படுத்தி வரி விலக்கு பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 480 மில்லியன் டாலர் மதிப்புள்ள (0.93%) பங்குகளை கொண்டு ரூ.7,500 கோடி சொத்து மதிப்பு கொண்டுள்ள அக்‌ஷதா, இந்தப் பங்குகளில் இருந்து ஆண்டுக்கு 11.5 மில்லியன் பவுண்டுகள் லாபமாக பெறுகிறார்.

குடியுரிமை இல்லாத அந்தஸ்து முறையைப் பயன்படுத்தி இந்த லாபத்துக்கு அவர் வரி செலுத்தவில்லை என்பதை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தினர். இன்னும் இந்திய குடியுரிமை கொண்டிருப்பதால் இங்கிலாந்து நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அக்‌ஷதா இந்த வரிவிலக்கை பெற்றாலும், மக்கள் அனைவருக்கும் வரி விதிக்கும் அதிகாரத்தில் உள்ள நிதியமைச்சரின் மனைவி என்ற முறையில் அவர் செய்தது தார்மிகரீதியில் சரியில்லை என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து ரஷ்யாவில் செயல்பட்டு வந்த இங்கிலாந்து அரசின் வணிகங்களை நிறுத்தினார் ரிஷி. அதேநேரம், ரஷ்யாவுடனான அக்‌ஷதாவின் குடும்ப வணிக தொடர்புகளுக்காக ரிஷி அவதூறுகளை எதிர்கொண்டார். அப்போது இன்ஃபோசிஸுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டு முடிவுகளில் அக்‌ஷதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார். விளக்கம் அளித்தாலும் சர்ச்சைகள் தொடரவே, சில நாட்களிலேயே இன்ஃபோசிஸ் தனது ரஷ்ய அலுவலகத்தை அவசர அவசரமாக தற்காலிகமாக மூடியது.

'கிரீன் கார்டு' ஹோல்டர் - அமெரிக்காவின் குடியுரிமையான 'கிரீன் கார்டு'-ஐ ரிஷி வைத்திருந்தார் என்ற புதிய புகைச்சலும் கிளம்பியது. அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ரிஷி, இங்கிலாந்தில் அரசியலில் ஈடுபட்டு அமைச்சரான பின்பும் தனது கிரீன் கார்டை வைத்திருந்துள்ளார். அமைச்சராக அமெரிக்காவுக்கு கடந்த வருடம் அரசு முறை பயணம் செய்யும் முன்பே இந்த கிரீன் கார்டு அந்தஸ்த்தை ரத்து செய்தார் என்றும் எதிர்க்கட்சிகள் புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அவரின் பிரதமர் பதவியை முதல் ரவுண்டில் காலி செய்தன.

ஆனால் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இப்போது பிரதமராகியுள்ளார். உலக நாடுகளை, குறிப்பாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியாக வரலாற்றில் முத்திரை பதிக்க இருக்கிறார் ரிஷி சுனக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x