Published : 24 Oct 2022 10:23 PM
Last Updated : 24 Oct 2022 10:23 PM
லண்டன்: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
45 நாட்கள் பிரதமராக இருந்த நிலையில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினமா செய்வதாக இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லசிடம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். இதையடுத்து, புதிய கட்சித் தலைவருக்கான தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பின்னர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். ரிஷி சுனக்கிற்கு மற்றொரு போட்டியாளராக இருந்த பென்னி மார்டன்ட்டும் போட்டியிடும் முடிவை கைவிட்டார். இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரிஷி சுனக், "கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பணிவாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். இந்த வாய்ப்பின்மூலம் நான் நேசிக்கும் கட்சிக்கும், நான் கடன்பட்டிருக்கும் நாட்டிற்கும் பிரதமராக சேவை செய்ய முடிந்தது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம்.
இங்கிலாந்து ஒரு பெரிய நாடு. ஆனால் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. நமக்கு இப்போது ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமையே தேவை. எனது கட்சியையும் நாட்டையும் முன்னேற்றுவதற்கே முன்னுரிமை அளிப்பேன். அதுதான் சவால்களை சமாளித்து நமது நாட்டின் அடுத்த சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி.
நான் உங்களுக்கு நேர்மையுடனும் பணிவுடனும் சேவை செய்வேன் என்றும், பிரிட்டன் மக்களுக்காக நாள் தோறும் உழைப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்" இவ்வாறு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT