Published : 24 Oct 2022 06:41 PM
Last Updated : 24 Oct 2022 06:41 PM

பாக்.பத்திரிகையாளர் கென்யாவில் சுட்டுக் கொலை: நல்ல நண்பனை இழந்துவிட்டதாக மனைவி உருக்கம்

பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷத் ஷெரீஃப் | கோப்புப்படம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முக்கிய செய்தித் தொகுப்பாளர்களில் ஒருவரான அர்ஷத் ஷெரீஃப், கென்யாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது மனைவி திங்கள் கிழமை தெரிவித்தார். அவருக்கு வயது 50. சில மாதங்களுக்கு முன்பு தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்படிருந்த அர்ஷத், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இருந்தார்.

அர்ஷத் பாகிஸ்தான் ராணுவத்தை அடிக்கடி விமர்சனம் செய்து வந்தார் என்றும், அவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பத்திரிகையாளரின் மனைவி, ஜவேரியா சித்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எனது நல்ல நண்பர், கணவர், எனது மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளர் ஒருவரை இழந்துவிட்டேன். அவர் கென்யாவில் சுடப்பட்டுள்ளார்" என்று போலீசார் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை உறுதிபடுத்தியுள்ள நைரோபி போலீசார், "குழந்தை கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது தவறுதலாக அர்ஷத் ஷெரீஃப் சுடப்பட்டார்" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், "அர்ஷத் ஷெரீஃப் தனது சகோதரர் குர்ராம் அகமதுவுடன் மகாடியில் இருந்து கென்ய தலைநகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நைரோபி - மகாடி நெடுஞ்சாலையில் வாகன சோதனைக்காக அவர்களது காரை நிறுத்தும்படி போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். போலீஸாரின் உத்தரவினை மதிக்காமல் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ததால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி காரைத் துரத்தினர்" என்று தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ஆரீஃப் அல்வி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ராணுவ அதிகாரிகள், பிற உயர் அலுவலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில், எல்லைகளற்று வேலை செய்யும் பத்திரிக்கையாளர்களுக்கான பத்திரிக்கைச் சுதந்திர குறியீட்டில் 108 நாடுகளில் பாகிஸ்தான் 157வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x