Published : 24 Oct 2022 11:30 AM
Last Updated : 24 Oct 2022 11:30 AM
லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் விலகி இருக்கிறார். இதனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல், கடந்த செப்டம்பர் மாதம் பிரதமராக பதவி ஏற்ற லிஸ் ட்ரஸ் கடந்த 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில் இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சா வளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையே நேரடி போட்டி நிலவி வந்தது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 100 எம்.பி.க்கள் ஆதரவுபெற்ற வேட்பாளரே பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க முடியும். ரிஷி சுனக்குக்கு இதுவரை 137 எம்.பி.க்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 59 எம்.பி.க்கள் ஆதரவு அளித்திருந்தனர்.
பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (அக்.24) கடைசி நாளாகும். இன்று மாலையே எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் அளவிலேயே புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட இருந்தது. எனினும் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு 28-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட இருந்தது.
இந்த நிலையில், பிரதமர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக போரீஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். “பிரதமர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு 102 எம்பிகளின் ஆதரவு இருக்கிறது என்றாலும், நாட்டின் நலனிற்காக ரிஷி சுனக், மற்றொரு வேட்பாளரான பென்னி மார்டென்ட் ஆகியோர் ஒன்றிணைந்து வர வேண்டும் என்று வலியுறுத்த தவறி விட்டேன். எனக்கு போதிய ஆதரவு இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்றாலும், இது சரியான தருணம் இல்லை என்று நான் கருதுகிறேன்" என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வரையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனால் 60 எம்பிகளின் ஆதரவினை மட்டுமே பெற முடிந்தது. இது ரிஷி சுனக்கை ஆதரிக்கும் 150 எம்பிகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவே.
பிரிட்டன் பிரதமர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அவரது பிரதான போட்டியாளரும், கடந்த தேர்தலில் லிஸ் ட்ரஸிடம் வாய்ப்பினை இழந்த ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து விதிகளின் படி, பிரதமர் தேர்தலில் போட்டியிட தகுதி பெருவதற்கு ஒருவர் 100 எம்.பி.,க்களின் ஆதரவினை பெற்றிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தகுதி பெறும்பட்சத்தில் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர் நாட்டின் பிரதமராக தொடர்வார்.
இதற்கிடையில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவளித்து வந்த பல எம்.பி.,க்கள் பென்னி மார்டன்ட்டுக்கு தங்களின் ஆதவினை மாற்றினர். பின்னர் ரிஷி சுனக்குக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர்.
போட்டியில் இருந்து ஜான்சன் விலகியிருப்பது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரிஷி சுனக்," போரிஸ் ஜான்சன் சவாலான காலத்தில் நமது நாடு மிகச் சிறப்பாக வழிநடத்தினார். அதற்காக நாம் அவருக்கு நன்றுயுடையவர்களாக இருக்க கடமைப்பட்டுள்ளோம். பிரதமர் போட்டியில் இருந்து அவர் விலகி இருந்தாலும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர் தனது பொதுவாழ்வினைத் தொடர்வார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த, 2019ம் ஆண்டு நடந்த பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை சிறப்பாக வழிநடத்திய போரிஸ் ஜான்சன், மூன்று ஆண்டுகளில் அவரது கட்சி எம்பிகளின் கிளர்ச்சியால் பதவி விலக வேண்டியதாகி விட்டது.
கோவிட் ஊரடங்கு காலத்தின் போது பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தினாரா என்ற போரிஸ் ஜான்சன் மீதான குற்றாட்டில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் உறுதியாகும் பட்சத்தில் அவர் தனது எம்பி பதவிலை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படலாம், அல்லது இடைநீக்கம் செய்யப்படலாம்.
ரிஷி சுனாக் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரிட்டனின் பிரதமரான முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெறுவார்.
1/ Boris Johnson delivered Brexit and the great vaccine roll-out.
He led our country through some of the toughest challenges we have ever faced, and then took on Putin and his barbaric war in Ukraine.
We will always be grateful to him for that.— Rishi Sunak (@RishiSunak) October 23, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT