Published : 24 Oct 2022 05:13 AM
Last Updated : 24 Oct 2022 05:13 AM

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன்: இந்திய வம்சாவளி வேட்பாளர் ரிஷி சுனக் அறிவிப்பு

ரிஷி சுனக்.

லண்டன்: இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல், பிரதமர் லிஸ் ட்ரஸ் கடந்த 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சா வளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 100 எம்.பி.க்கள் ஆதரவுபெற்ற வேட்பாளரே பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க முடியும். ரிஷி சுனக்குக்கு இதுவரை 137 எம்.பி.க்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 59 எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த பின்னணியில் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் இருவரும் லண்டனில் நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசினர். இருவரும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் போட்டியில் இருந்து விலக போரிஸ் ஜான்சன் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து ரிஷி சுனக் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

மிகப்பெரிய நாடான இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் பதவிக்கான தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த நேரத்தில் நிதியமைச்சராகப் பணியாற்றினேன். அப்போது நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தது.

இப்போது நாம் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம். என்னால் இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும்.கடந்த 2019-ல் கன்சர்வேட்டிவ் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.

நான் பிரதமராக பதவியேற்றால் அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு நிலையிலும் நிபுணத்துவம் இருக்கும். இரவும் பகலும் அயராது பாடுபட்டு நாட்டை முன்னேற்ற பாதையில் வழிநடத்துவேன். எனவே இங்கிலாந்தின் பிரதமராக எனக்கு வாய்ப்பளிக்க வேண்டு கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும்அவரது ஆதரவாளரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த தலைவருமான ஜேக்கப் ரீஸ் கூறும்போது, “பிரதமர்பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் போட்டியிடுவது உறுதி. எம்.பி.க்கள், கட்சியினரின் பெருவாரியான ஆதரவு அவருக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

மற்றொரு வேட்பாளர் பென்னி மார்டென்டுக்கு இதுவரை 24 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 100 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் அவர் போட்டியிலிருந்து விலகுவார் என்று தெரிகிறது.

28-ல் முடிவு அறிவிப்பு

பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று மாலையே எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் அளவிலேயே புதிய பிரதமர் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. எனினும் தேர்தலில் வாக்குகள் எண்ணப் பட்டு 28-ம் தேதி முடிவு அறிவிக் கப்பட உள்ளது.

இப்போது நாம் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம். என்னால் இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x