Published : 22 Oct 2022 03:02 PM
Last Updated : 22 Oct 2022 03:02 PM

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? - போட்டியில் முந்தும் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக்

ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் முன்னணியில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அரசு வரி குறைப்பு திட்டங்களில் மேற்கொண்ட குளறுபடியான நடவடிக்கைகளையடுத்து பிரிட்டன் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு கணிசமாக வீழ்ச்சியடைந்தது.

ஏற்கெனவே அன்றாட பொருட்களின் செலவினம் அதிகரித்து வருவதால் அவதிக்குள்ளான பிரிட்டன் மக்களுக்கு பவுண்ட் மதிப்பில் ஏற்பட்ட சரிவு கவலையை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில், அரசின் குளறுபடியான அறிவிப்புகளுக்கு பொறுப்பேற்று பிரிட்டன் நிதி அமைச்சர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸும் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் போட்டியில் முன்னாஸ் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் முந்துவதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னர் நடந்த கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் தேர்தலில் இறுதிவரை முன்னேறி லிஸ் ட்ரஸ்ஸிடம் தோல்வியடைந்த ரிஷி சுனக்குக்கு 100 எம்பிக்களின் ஆதரவு பலமாக இருப்பதால் அடுத்த பிரதமர் ஆகும் வாய்ப்பு ரிஷிக்குத்தான் உள்ளதாக கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. பால் பிரிஸ்டோ , “ இந்த வாய்ப்பை தன் பக்கம் போரிஸ் திருப்புவார் என்று நம்புகிறேன். இதனை கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.,கள் உணர்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். போரிஸ் அடுத்த பொது தேர்தலிலும் வெற்றி பெற முடியும்” என்றார். இந்த பரப்பரப்புகளுக்கு மத்தியில் கன்சர்வேடிவ் கட்சி தலைமைக்கான தேர்தல் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடக்கவுள்ளது.

பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்?

இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்கட்டமாக கட்சி எம்.பி.க்கள் இடையே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அவர்களின் வாக்குகளின் அடிப்படையில் 2 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இறுதிக்கட்டமாக கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இதில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்பார்.

லிஸ் ட்ரஸ் பதவி விலகலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். ரிஷி சுனக் பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்டவர். இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார்.

இப்போதைய சூழ்நிலையில் ரிஷி சுனக் பிரதமராக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை ஆளும் கட்சி எம்.பி.க்களில் 137 பேர் ரிஷியை ஆதரித்தனர். லிஸ் ட்ரஸுக்கு 113 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வாக்களித்தபோது ரிஷிக்கு 42.6 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளைப் பெற்று பிரதமராக பதவியேற்றார்.

இந்தமுறை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்து புதிய பிரதமரை தேர்வு செய்யக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்படி ரிஷி சுனக் புதிய பிரதமராக பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் போட்டியில் களமிறங்குவதால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று தெரிகிறது.

இப்போதைய நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் ரிஷி சுனக்குக்கு 21 சதவீத ஆதரவும், போரிஸ் ஜான்சனுக்கு 16 சதவீத ஆதரவும் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி பதவியேற்றால் அந்த நாட்டில் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை பெறுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x