Published : 10 Nov 2016 06:27 PM
Last Updated : 10 Nov 2016 06:27 PM
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவடையும் பாகிஸ்தான் - அமெரிக்க உறவுகள் வலுவிழக்கும் என்று பாகிஸ்தானியர்கள் கவலையடைந்துள்ளனர்.
டொனால்டு ட்ரம்ப் அதிபரானவுடன் அமெரிக்க கொள்கையில் மாற்றம் ஏற்படும் இதில் இந்திய ஆதரவு அதிகரிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தொடர்ந்து வைத்து வருகிறது, ஆனால் பாகிஸ்தான் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆப்கான் தாலிபான் தலைவரை பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல் கொன்றைதையடுத்து அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ட்ரம்ப்பின் முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சும் பாகிஸ்தானியர்களை கவலையடையச் செய்துள்ளன. இது குறித்து லாகூரைச் சேர்ந்த அயல்நாட்டுக் கொள்கை ஆய்வாளர் ஹசன் அஸ்கரி ரிஸ்வி கூறும்போது, “பாகிஸ்தானை அமெரிக்கா கைவிடாது, ஆனால் ஹிலாரியை ஒப்பிடும் போது ட்ரம்ப் மிகவும் கடினமான அதிபராகவே இருப்பார் என்று தெரிகிறது. பாகிஸ்தானை விட ட்ரம்ப் ஆட்சி இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.
ஃபாக்ஸ் செய்திக்கு ட்ரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஆப்கானில் சுமார் 10,000 அமெரிக்க படையினரை தொடர்ந்து தக்கவைப்பேன், ஏனெனில் அண்டை நாடான பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்துள்ளது” என்று கூறியிருப்பதும் பாகிஸ்தானிய அச்சத்தை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்து சேனாவின் ராஷ்மி குப்தா கூறும்போது, “அவர் அமெரிக்க தேசியவாதி, நாம் இந்திய தேசியவாதிகள். எனவே அவர்தான் நம்மை சரியாகப் புரிந்து கொள்ள முடியும். பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதம் தூண்டி விடப்படும் விவகாரத்தில் அவர் இந்தியா பக்கம் நிற்பார்” என்கிறார் உறுதியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT