Published : 17 Oct 2022 09:34 AM
Last Updated : 17 Oct 2022 09:34 AM
நைரோபி: ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு விதிக்கப்படுள்ளது.
இதுகுறித்து உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும்போது, “உகண்டாவில் எபோலாவை கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பொருட்டு உள்ளரங்குகளில் பிரார்த்தனைகள் செய்வது, பொழுதுபோக்கு நிகழ்வுகள் போன்றவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகளையும், மக்களையும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் நாம் எபோலாவை கடப்போம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் அரசு செலுத்தி வருகின்றது.உகாண்டாவில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் எபோலா வைரஸ் பரவத் தொடங்கியது. இதுவரை 19 பேர் எபோலா வைரஸுக்கு பலியாகி உள்ளனர்.
ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா - 1976-ல் எபோலா எனும் நதிக்கரையில் உள்ள யம்புக்கு எனும் குக்கிராமத்தில் பேராசிரியர் ஜேக்கஸ் முயும்பே தொற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார். அப்போது ஒரு கன்னியாஸ்திரிக்கு வினோதமான நோய் ஏற்பட்டிருப்பதாக கூறி ஜேக்கஸ் அழைக்கப்பட்டார். அவரது உடலில் இருந்து ரத்த மாதிரிகளை ஜேக்கஸ் சேகரித்தார். அந்த ரத்தத்தைப் பரிசோதித்தபோது அது எபோலா வைரஸ் என்பது உறுதியானது. எபோலா நதிக்கரையோர கிராமத்தில் கண்டறியப்பட்டதால் அந்த வைரஸுக்கு எபோலா அப்பெயர் வழங்கப்பட்டது.
எபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துவிட்டது. எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 15019 பேர் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனர். எபோலா பாதித்தால் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு, வயிற்றோட்டம் ஏற்படும். 2013 முதல் 2016 வரை எபோலா மேற்கு ஆப்பிரிக்காவைக் கடுமையாக அச்சுறுத்தியது. சுமார் 11,000 பேர் இந்தக் காலகட்டத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை முறை: எபோலா தொற்று ஏற்பட்டால், அந்தப் பகுதியை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்குள்ள மக்களுக்கு எபோலா பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் மற்றவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்துவதன் மூலம் எபோலா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT