Published : 16 Oct 2022 07:33 PM
Last Updated : 16 Oct 2022 07:33 PM

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் செய்யமாட்டோம்: சீனாவுக்கு தைவான் பதிலடி

சாய் இங்-வென் | கோப்புப் படம்

தைபே: சீன தேசிய மாநாட்டில் தைவான் குறித்து ஜி ஜின்பிங் பேசியதற்கு தைவான் பதிலடி அளித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பீஜிங் கிரேட் ஹாலில் நடந்தது.

மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசும்போது, “தைவான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. தைவான் பிரச்சினையில் சீன மக்கள் தான் தீர்வு காண வேண்டும். சீன அரசு ஒருபோதும் பலத்தைப் பிரயோகப்படுத்த தயங்காது. தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். அதீத முயற்சிகளுடன் உண்மையான வழியில் இணைப்பை சாத்தியப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சீன அதிபரின் பேச்சுக்கு தைவான் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “ தைவான் அதன் இறையாண்மையில் பின்வாங்காது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் செய்யாது. தைவான் சுதந்திரமான நாடு. போரை சந்திப்பது தைவானின் விருப்பம் அல்ல. இதுதான் தைவானின் மக்களின் ஒருமித்த கருத்து” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றிருந்தார். நான்சியின் வருகையை சீனா கடுமையாக எதிர்த்தது. இதனைத் தொடர்ந்து சீனா - தைவான் இடையே பதற்றம் நிலவியது. தைவான் எல்லையில் ராணுவ பயிற்சிகளை சீன அரசு மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுவிடுமா? என்ற அச்சம் நிலவியது.

இந்த நிலையில் தைவான் சுதந்திர தின உரையில் அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் பேசும்போது, “தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான போர் நடப்பது விருப்பமல்ல, ஆனால் தைவானின் ராணுவம் பலம் வலுப்படுத்தப்படும் “ என்று பேசி இருந்தார்.

இந்த சூழலில் சாய் இங்-வென் பிரிவினைவாத கொள்கையால் தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா மறுத்துவிட்டது. இருப்பினும், "ஒரு நாடு, இரு அரசு" என்ற திட்டத்தை சீனா தொடர்ந்து முன்மொழிந்து வருகிறது. ஆனால், தைவான் அரசியல்வாதிகள் இதை ஏற்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x