Published : 16 Oct 2022 12:04 PM
Last Updated : 16 Oct 2022 12:04 PM

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு | தைவான் முதல் பொருளாதாரம் வரை ஜி ஜின்பிங் உரையின் முக்கிய அம்சங்கள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஜி ஜின்பிங்

பீஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கியது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பீஜிங் கிரேட் ஹாலில் நடந்தது. 2300 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பலத்த கரகோஷங்களுக்கு இடையே ஜி ஜின்பிங் வருகை தந்தார்.

இந்த மாநாட்டில் கட்சியின் புதிய பொதுச் செயலரை தேர்ந்தெடுப்பது வழக்கம். சீனாவில் ‘ஒரு கட்சி ஆட்சி’ நடைபெறுகிறது. அந்தவகையில், சீனாவில் அதிபர் பொறுப்பை விடவும் கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படவிருக்கிறார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜி ஜின்பிங், "ஹாங்காங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹாங்காங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது. இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல், தைவான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. தைவான் பிரச்சினையில் சீன மக்கள் தான் தீர்வு காண வேண்டும். சீன அரசு ஒருபோதும் பலத்தைப் பிரயோகப்படுத்த தயங்காது. தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். அதீத முயற்சிகளுடன் உண்மையான வழியில் இணைப்பை சாத்தியப்படுத்துவோம். இருப்பினும் தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம்.

கரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை சீனாவின் ஜீரோ கோவிட் நிலைப்பாடு பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. சீனாவைப் பொறுத்தவரை மக்களும், அவர்களின் உயிரும் நலனும் தான் முதலில் முக்கியத்துவம் பெற்றது. அதனால் ஜீரோ கோவிட் உத்தி மூலம் சீனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் உடல்நலனை சிறப்பாக பேணியது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது

சீனா காலநிலை மாற்றத்தை நிர்வகிப்பதில் சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பை நல்கும். நிலக்கரியை திறம்பட பயன்படுத்த நிலக்கரி பயன்பாட்டுக் கொள்கைகள் வகுக்கப்படும்.

பீஜிங் ஒருபோதும் பனிப்போரை ஊக்குவிக்காது. ஆனால் அதிகார அரசியல், மேலாதிக்கம், பனிப்போர் மனப்பாங்கு ஆகியவற்றை கடுமையாக எதிர்க்கும். இரட்டை நிலைப்பாட்டையும் எதிர்க்கிறது.

உலகத்தரம் வாய்ந்த ராணுவத்தைக் கட்டமைப்பதில் சீனா எப்போதும் அதிக கவனம் செலுத்தும். அடுத்த ஐந்து ஆண்டுகள் சீனப் பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. ஆகையால் சீனா பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி ஒரு நவீன சோஷலிஸ் சக்தியை கட்டமைக்க பாடுபடும்" என்றார்.

ஒரு வாரத்திற்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்படுவார். அதுமட்டுமல்லாமல் கட்சியின் பொலிட் பீரோவுக்கு 25 உறுப்பினர்களும், மத்திய குழுவுக்கு 200 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x