Published : 14 Oct 2022 02:27 PM
Last Updated : 14 Oct 2022 02:27 PM

உலக அளவில் வீழ்ச்சியடையும் வனவிலங்குகளின் எண்ணிக்கை: ஆய்வில் அதிர்ச்சி

பிரதிநிதித்துவப் படம்

லண்டன்: 1970-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என்று உலக வன உயிரின நிதியம் (WWF) தெரிவித்துள்ளது.

உலகில் 56,441 வனவிலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக உலக வன உயிரின நிதியம் வெளியிட்ட அறிக்கையில், “2018-ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் சுமார் 5,000 இனங்களைச் சேர்ந்த 32,000 வனவிலங்குகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை 70% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. காடழிப்பு, மனிதர்களின் சுரண்டல், மாசு, காலநிலை மாற்றமே வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருடத்திற்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை 2.5% அளவில் குறைந்து வருகிறது. லத்தின் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் இதன் தாக்கம் தீவிரமாக தெரிகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக லண்டன் விலங்கியல் அமைப்பின் இயக்குநர் ஆண்ட்ரிவ் டெரி பேசும்போது, “தீவிரமான வீழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. உலகம் மறைந்து கொண்டிருக்கிறது. இயற்கை மோசமான நெருக்கடியில் இருந்து வருகிறது. நாம் போரில் தோற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிய நம்பிக்கை அளிக்கும் தகவலையும் உலக வன உரியின நிதியத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் கஹுசி பீகா தேசிய பூங்காவில் 2010-இல் 400 இருந்த மலை கொரில்லா எண்ணிக்கை தற்போது 600 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x