Published : 13 Oct 2022 10:33 AM
Last Updated : 13 Oct 2022 10:33 AM

ஐ.நா. அரங்கில் காஷ்மீர் பிரச்சினை: அற்பமாக நடப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

இந்தியப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ்

ஜெனீவா: ஐ.நா பொதுச் சபையில் ரஷ்யா - உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடந்த அவசர விவாதத்தின் போது பாகிஸ்தான் பிரதிநிதி காஷ்மீர் விவகாரம் பற்றிப் பேசியமைக்கு இந்தியா கடும் கண்டனம் பதிவு செய்துள்ளது.

ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் பிரதிநிதி முனிர் அக்ரம் பேசுகையில், "சர்வதேச சட்டங்களின் கீழ், எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்ற முடிவுக்கான உரிமை என்பது வெளிநாட்டு அல்லது காலனி ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் மக்களுக்கே அதாவது ஜம்மு காஷ்மீர் மக்களைப் போன்றோருக்கே பொருந்தும். எனவே சுய முடிவுக்கான உரிமைக்கு வித்திடும் நடவடிக்கைகள் ராணுவ கட்டுப்பாடு இல்லாத இடத்தில் ஐ.நா மேற்பார்வையில் நடக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், "ஐ.நா. அரங்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் மீண்டும் ஒரு தரப்பு இங்கே இந்தியா மீது அற்பமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுபோன்ற அறிக்கைகள் ஒட்டுமொத்த அரங்கின் கண்டனத்திற்கு தகுதியானது. அதேவேளையில் தொடர்ந்து தவற்றை பரப்பும் அந்த நாட்டைப் பார்த்து பரிதாபமாகவும் இருக்கிறது.

உலக அரங்கில் இப்படியெல்லாம் பேசுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தினால் எங்கள் மக்கள் உயிருக்கான உரிமையை சுதந்திரத்தைப் பெறுவார்கள். ஜம்மு காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதி. இதில் பாகிஸ்தானின் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் சரி ஜம்மு காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிக்க இயலாதது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x