Published : 12 Oct 2022 05:27 AM
Last Updated : 12 Oct 2022 05:27 AM
புதுடெல்லி: சர்வதேச அணுசக்தி முகமையில் சீனாவின் வரைவு தீர்மானத்தை இந்தியா முறியடித்தது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் கூட்டணியை அமைத்துள்ளன. ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் சீன கடற்படை ஏராளமான ஆளில்லா நீர்மூழ்கிகளை உலவ விட்டிருக்கிறது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் இந்திய, பசிபிக் பிராந்திய கடல் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆக்கஸ்) ஏற்படுத்தின. இதன் மூலம் அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ஐ.நா. சபையின் கீழ் செயல்படும் சர்வதேச அணுசக்தி முகமையில் ஆக்கஸ் ஒப்பந்தத்துக்கு எதிராக ஒரு வரைவு தீர்மானத்தை சீனா கடந்த மாதம் தாக்கல் செய்தது. ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் அந்த தீர்மானத்தை சீனா கைவிட்டது. சீனாவின் திட்டத்தை முறியடித்ததன் பின்னணியில் இந்தியா இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, “சர்வதேச அணு சக்தி முகமையில் ஆக்கஸ் ஒப்பந்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இந்த விவகாரத்தில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் தெளிவான முடிவை எடுத்தார். அவரது முடிவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். மற்ற உறுப்பு நாடுகளையும் ஆதரவு அளிக்க அறிவுறுத்தினோம்" என்றார்.
மேலும் ஆஸ்திரேலியாவின் ஏபிசி ஊடகத்துக்கு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், “சர்வதேச அணுசக்தி முகமையில் ஆக்கஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அதன் நட்பு நாடுகளும் விரிவாக ஆலோசனை நடத்தின. இந்தியாவின் கருத்துக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு அளித்தன’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT