Published : 08 Oct 2022 05:48 PM
Last Updated : 08 Oct 2022 05:48 PM
தெஹ்ரான்: “மாஷா அமினி உடல் நலக்குறைவால்தான் உயிரிழந்தார்” என்று ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “மாஷா அமினியின் மரணம், அவரது தலை மற்றும் முக்கிய உறுப்புகளில் அடிப்பட்டதால் ஏற்படவில்லை. எட்டு வயதில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாஷாவின் மரணம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் சிடி ஸ்கேன்களில் தெளிவாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஈரான் அரசின் இந்த விளக்கத்தை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாஷாவின் மரணத்தை மறைப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.
அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாஷா கோமா நிலைக்கு சென்றார். இதில் அவர் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, ஈரானின் முக்கியத் தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT