Published : 07 Oct 2022 08:27 PM
Last Updated : 07 Oct 2022 08:27 PM
கீவ்: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடை ரஷ்ய ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ள உக்ரைன் ராணுவ அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ், இந்த அழைப்பை உடனடியாக ஏற்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், கடும் இழப்புகளைச் சந்தித்தவாறு இரு தரப்பும் போரிட்டு வருகின்றன. இரு தரப்பும் வெற்றியையும் தோல்வியையும் பல பகுதிகளில் சந்தித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அந்நாடு ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்துக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் வீடியோ மூலம் செய்தி ஒன்றை விடுத்துள்ளார். அதன் விவரம்: ‘உக்ரைனுக்குள் நுழைந்து உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக சண்டையிட்டு வரும் ரஷ்ய ராணுவத்தினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய அழைப்பு விடுக்கிறேன். அவ்வாறு உடனடியாக ஆயுதங்களை கீழே போடுபவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உக்ரைன் உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், அவர்களுக்கு நீதி வழங்கப்படும். அதோடு, உக்ரைன் அரசால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய ராணுவத்தினர் குறித்து விசாரிக்க நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்.
இந்த அழைப்பை ஏற்பதன் மூலம் ரஷ்யாவை பேரழிவில் இருந்தும், ரஷ்ய ராணுவத்தை அவமானத்தில் இருந்தும் நீங்கள் காக்க முடியும். ரஷ்ய அரசு உங்களை வஞ்சித்திருக்கிறது; ஏமாற்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
நீங்கள் உயிரிழந்தால், நேட்டோவுக்கு எதிரான போரில் வீர மரணமடைந்துவிட்டதாக அவர்கள் கூறுவார்கள். அவ்வாறு கூறுவது எளிது. ஆனால், உண்மையில் இந்தப் போரில் நேட்டோ பங்கேற்கவில்லை என்பதால், அவ்வாறு கூறுவது கற்பனையானது. நேட்டோ ஆயுதங்களை அளிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அந்த ஆயுதங்களைக் கொண்டு உங்களுக்கு எதிராக போர் புரிவது உக்ரைன் ராணுவம்தான்.
உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ரஷ்யாவின் நிலம் தேவையில்லை. போதுமான அளவுக்கு நிலம் எங்களிடம் உள்ளது. வெளியே சென்ற அனைவரையும் நாங்கள் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று அந்த வீடியோவில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பேசி இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT