Published : 03 Oct 2022 07:52 PM
Last Updated : 03 Oct 2022 07:52 PM
காபூல்: ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்து கல்விக்கூடத்தின் பெண்கள் வகுப்பறையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கனிஸ்தானை ஆளும் தாலிபான்கள், பெண் கல்விக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருக்கிறார்கள். இதேபோல், ஆப்கனிஸ்தானில் செல்வாக்குள்ள தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பும் பெண் கல்வியை எதிர்க்கிறது. அதோடு, இந்த இரு அமைப்புகளும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை தங்கள் எதிரிகளாகக் கருதுகிறார்கள்.
இந்நிலையில், காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள புல் இ சுக்தா என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை தாக்குதல் நிகழ்ந்தது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்த வகுப்பறை ஒன்றில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மாணவிகள் கல்வி கற்று வந்த வகுப்பறைக்குள் நுழைந்த தீவிரவாதி, உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில், வகுப்பறையில் கல்வி பயின்று வந்த மாணவிகள் 46 பேர் உட்பட 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இந்த எண்ணிக்கையை இன்று உறுதிப்படுத்தி உள்ளது. எனினும், ஆப்கனிஸ்தானை ஆளும் தாலிபான்கள் 25 பேர் உயிரிழந்ததாகவும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்த தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் காபூலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலை ஐ.நா வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட இதேபோன்றதொரு தாக்குதலில் ஏராளமான மாணவிகள் உள்பட 85 பேர் உயிரிழந்தனர்; சுமார் 300 பேர் காயமடைந்தனர்.
ஆப்கனிஸ்தானில் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராகவும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT