Published : 26 Sep 2022 08:59 PM
Last Updated : 26 Sep 2022 08:59 PM
பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வரும் நிலையில், அது குறித்து சீன அரசு விளக்கம் அளிக்காததால் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.
சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பெய்ஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின்(பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து சீன மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாட்டை ஆட்சி செய்யும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் இடையே நிலவி வந்த மோதல் முற்றியதை அடுத்து, ராணுவம் அவரை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகவும், பிஎல்ஏ தலைவர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுவிட்டதால், மூத்த ராணுவ கமாண்டர் லி கிகுவாமிங் நாட்டின் அடுத்த அதிபராக விரைவில் பொறுப்பேற்க உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பதிவிடப்பட்டுள்ளது. ஜி ஜின்பிங் இருக்கும் மாளிகையை சுற்றிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தலைநகர் பெய்ஜிங்கிற்கான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாகவும் 9 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மையமாக வைத்து, சீனாவுக்கு உள்ளேயும் வெளியேயும் இதுபோன்ற செய்திகள் காட்டுத் தீயைப் போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. எனினும், சீன அரசு சார்பில் இது குறித்து இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படாதது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது.
எனினும், கரோனா பெருந்தொற்றை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வருவதில் சீன அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், வெளிநாடு சென்று வந்ததால் அதிபர் ஜி ஜின்பிங் அரசு விதிப்படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பார் என்றும் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டபோதிலும், முற்றிலுமாக ரத்து செய்யப்படாததால் அதுவும் கரோனா பெருந்தொற்று காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தகவல் பரவுவது ஏன்? - சீனாவில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் இந்த வாரம் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன அதிபருக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜி ஜின்பிங்குக்கு எதிராகச் செயல்படுபவர்கள், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை பரப்புவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT