Published : 26 Sep 2022 02:04 PM
Last Updated : 26 Sep 2022 02:04 PM

20,000,000,000,000,000 - நம் பூமியில் இத்தனை எறும்புகளா?

நியூயார்க்: நாம் வாழும் பூமியில் மொத்தம் 20 குவாட்ரில்லியன் எறும்புகள் (20,000,000,000,000,000) இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற உயிரியலாளர் எட்வர்ட் ஓ.வில்சன், “பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிரினங்கள்தான் இந்த உலகத்தை ஆள்கின்றன” என்று தெரிவித்தார். வில்சன் கூறியது முற்றிலும் சரி என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வினை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர்.

ஆய்வு குறித்து ஜெர்மனியில் உள்ள வூர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் பூச்சி சூழலியலாளர் நூட்டன் கூறும்போது, “நாங்கள் அதிக எண்ணிக்கையிலான எறும்புகளைப் பற்றி மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்த எண்ணிக்கை அனைத்து பல தரவுகளிலிருந்து ஒருங்கிணைத்தவை. தென் அமெரிக்க காடுகள் போன்ற வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நிலத்தில் வாழும் எறும்புகளின் எண்ணிக்கை சுமார் 3 குவாட்ரில்லியன் என குழு மதிப்பிட்டுள்ளது” என்றார்.

இங்கிலாந்தின் க்ளவ்செஸ்டர்ஷைர் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொடர்புப் பேராசிரியர் ஆடம் ஹார்ட் கூறும்போது, "எத்தனை எறும்புகள் பூமியில் உள்ளன என்பது வியக்கத்தக்க பொதுவான கேள்வி. இதற்கு சில மதிப்பீடுகள் இருந்தாலும், எண்ணிக்கை இதுவரை உறுதியாக இருந்ததில்லை. உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 500 ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புதிய ஆய்வு முடிவு, எறும்புகளின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு சிறந்த பதிலை அளிக்கிறது. மேலும், இந்த ஆய்வுகள் எறும்புகள் உண்மையில் எவ்வளவு முக்கியம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்றார்.

எனினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எறும்புகளின் எண்ணிக்கை தோராய மதிப்புதான். பூமியின் அடிப்பகுதியில் ஏராளமான ஏறும்புகள் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. எறும்புகளை பற்றி சில தகவல்கள்:

  • டைனோசர்களின் காலத்திலிருந்தே எறும்புகள் இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிணாமம் நடைபெற்று சுமார் 130 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) ஆண்டுகள் ஆகின்றன.
  • உலகம் முழுவதும் சுமார் 10,000 முதல் 12,000 வகையான எறும்புகள் வாழ்கின்றன.
  • எறும்புகள் தனது எடையைவிட 20 - 50 மடங்கு அதிகமான எடையைத் தூக்க வல்லவை
  • சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர் வாழும்.
  • எறும்புகளுக்குக் காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே சுற்றியுள்ள விஷயங்களை உணருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x