Last Updated : 25 Nov, 2016 07:40 PM

 

Published : 25 Nov 2016 07:40 PM
Last Updated : 25 Nov 2016 07:40 PM

உருகும் ஆர்டிக் பனியால் உலகுக்கு பேராபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் பனிப்பாறைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உருகி வருவதால் உலகம் முழுவதும் பேரழிவுக்கான விளைவுகள் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பனிப்பிரதேசமான ஆர்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டம் உயருவதுடன் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உலகம் முழுவதும் பருவநிலையில் மாற்றம் ஏற்படலாம் என ஆர்டிக் பகுதியை ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து வெள்ளியன்று வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆர்டிக் பகுதியில் தற்போது தட்பவெட்பம் 20 டிகிரி சென்டிகிரேடாக உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம். பனிப்பிரதேசத்தில் தற்போது அதிக அளவில் தாவரங்கள் வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் பனி குறைவதுடன் அதிக அளவில் வெப்பம் உறிஞ்சப்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாவரங்களில் இருந்து வெளியாகும் பசுமை குடில் வாயுவால் (Green house gases) ஆர்டிக் பகுதி வெப்பம் அடைந்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கடலின் பருவமுறைகளிலும் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்டிக் பகுதி ஆராய்ச்சியாளரான கார்ஸன் கூறும்போது, ‘‘அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப், ஆர்டிக் பகுதி ஆராய்ச்சிக்கு செலவிடுவதை வட, விண்வெளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளார். இது மிகப் பெரிய தவறாகும். துருவப் பகுதிகளில் துல்லியமாக ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான அபாயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தற்போது ஆர்டிக் பகுதியில் மிகப் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பெரிய பிரச்சினையாகவும் உருவாகியுள்ளது. ஆனால் குறைந்த அளவிலேயே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது’’ என்றார்.

ஆர்டிக்கில் பனி உருகி வருவதால் அதன் அருகே வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். எனவே வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x