Published : 24 Sep 2022 10:17 AM
Last Updated : 24 Sep 2022 10:17 AM
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 77வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி பாகிஸ்தான் பிரதார் ஷபாஸ் ஷெரீஃபின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்.
முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஐ.நா. சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப், "பாகிஸ்தான் இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறது. ஆனால் இந்தியாவுடனான சுமுகமான உறவு அது காஷ்மீர் பிரச்சினைக்கு நியாயமான நேர்மையான தீர்வு ஏற்படுத்தும் வரை சாத்தியப்படாது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து ஐ.நா.வில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி மிஜிடோ வினிடோ, "காஷ்மீர் பிரச்சினை தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு தவறானது. உண்மைக்குப் புறம்பானது. பாகிஸ்தான் தான் காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது. இந்த உன்னதமான அவையை இந்தியாவுக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க பாகிஸ்தான் பிரதமர் தேர்வு செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. உள்நாட்டில் நிலவும் குழப்பங்களை திசைத்திருப்ப முடியாததால் அவர் இவ்வாறு செய்துள்ளார். அமைதியை விரும்பும் தேசம் எதற்காக 1993 மும்பை தாக்குதலுக்கு துணை போன தாவூத் இப்ரஹிமுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்.
அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாகக் கூறும் எந்த ஒரு நாடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது. அதேபோல் மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது அல்லவா?
பாகிஸ்தானில் சமீப காலமாக இந்து, சீக்கிய, கிறிஸ்துவப் பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். சொந்த நாட்டில் சிறுபான்மையினர் உரிமையைப் பேணாதவர்கள் சர்வதேச அரங்கில் அமர்ந்து கொண்டு அதே சிறுபான்மையினர் உரிமையைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
இந்திய துணைக்கண்டத்தில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற எங்களின் இலக்கு உண்மையானது. அது பரவலாக அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பார்வையே. ஆனால் இது நிறைவேற எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT