Published : 24 Sep 2022 06:40 AM
Last Updated : 24 Sep 2022 06:40 AM

லெபனானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற சென்றபோது சிரியாவில் படகு கவிழ்ந்து 73 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ்: சிரியாவில் படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். லெபனான் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டின் பணமதிப்பு 90 சத
வீதம் சரிவடைந்தது.

இதனால் அந்த நாட்டில் லட்சக்கணக் கானோர் வேலையை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் லெபனான் நாட்டிலிருந்து படகு மூலம் நேற்று முன்தினம் வெளிநாடுகளுக்குத் தப்ப முயன்ற படகு சிரியாவின் டார்ட்டஸ் துறைமுகம் அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்தது. இதில் 73 பேர் உயிரிழந்ததாக சிரியா சுகாதாரத் துறை அமைச்சர் ஹசன் அல் கபாஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் 100 முதல் 150 பேர் வரை இருந்ததாகவும், அதில் 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படகில் வந்த 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். எஞ்சியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக, படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் லெபனானிலிருந்து புறப்பட்டு சிரியா வந்து கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனிடையே படகு விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லெபனான் நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் அலி ஹமி தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் சடலங்களை லெபனானுக்கு அனுப்பும் பணிகளை சிரியா தொடங்கியுள்ள தாகவும் அமைச்சர் ஹசன் அல் கபாஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x