Published : 24 Sep 2022 04:57 AM
Last Updated : 24 Sep 2022 04:57 AM

இன ரீதியாக வன்முறை | கனடாவில் எச்சரிக்கையாக இருங்கள் - இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

எஸ்.ஜெய்சங்கர்

புதுடெல்லி: இனரீதியிலான வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பதால், கனடாவில் உள்ள இந்தியர்கள் மிகுந்தஎச்சரிக்கையுடன் இருக்கும்படிவெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள சில பிரிவினைவாத குழுக்கள் காலிஸ்தான் குறித்த பொதுவாக்கெடுப்பை பிராம்டன் நகரில் கடந்த 19-ம் தேதிநடத்தியுள்ளனர். இதில் கனடாவில்உள்ள சீக்கியர்கள் பலர் பங்கேற்றனர். நட்புநாடான கனடாவில்,தீவிரவாத குழுக்கள் அரசியல்உள்நோக்கத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது. இது கேலிக்கூத்தான செயல் என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார்.

மேலும் இனரீதியிலான வெறுப்பு நடவடிக்கைகளும் கனடாவில் நடைபெறுகின்றன. இதில் இந்தியர்கள் பலர் தாக்கப்பட்டனர். கனடாவில் நடைபெற்ற இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கனடாவில் வெறுப்பு குற்றங்கள், இனரீதியிலான வன்முறைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கனடாவில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனடா அரசை வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கனடாவில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேற்கண்ட சம்பவங்கள், குற்றங்கள் அதிகரித்துள்ளதால், கனடாவில் உள்ள இந்தியர்கள், இந்திய மாணவர்கள், கனடாவுக்கு செல்லவுள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பிரிட்டனில் பாதுகாப்பு

பிரிட்டனிலும் சில இடங்களில் இந்தியர்களுக்கும் வேறு பிரிவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நியூயார்க் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமுன்தினம் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லியை சந்தித்துப் பேசினார். அப்போது பிரிட்டனில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு குறித்து தனது கவலைகளை பகிர்ந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x