Published : 23 Sep 2022 01:49 PM
Last Updated : 23 Sep 2022 01:49 PM
நியூயார்க்: பேட்டி எடுக்கும்போது ஹிஜாப் அணிய மறுத்ததால் தனியார் தொலைக்காட்சியின் சர்வதேச பத்திரிக்கையாளர் கிறிஸ்டியன் அமன்பூருடனான நேர்காணலை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ரத்து செய்தார்.
சிஎன்என் தொலைக்காட்சியின் பிரபல சர்வதேச செய்தியாளர் கிறிஸ்டியன் அமன்பூர். இவர், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை அவரின் அலுவல்களுக்கிடையில் நேர்காணல் செய்வதாக இருந்தது. இதற்காக பல வாரங்களாக திட்டமிடப்பட்டு புதன்கிழமை இரவு நேர்காணல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இப்ராஹிம் ரைசி அமெரிக்காவில் கொடுக்கும் முதல் நேர்காணல் இது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தனது நேர்காணலை ரத்து செய்துவிட்டதாகவும், பேட்டி காணும் கிறிஸ்டியன் அமன்பூர் ஹிஜாப் அணிய மறுத்ததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிறிஸ்டியன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் கூறியிருப்பதாவது, "ஈரானில் கடந்த வாரம் கலாசார காவலர்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற 22 வயது பெண் போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து. ஈரான் முழுவதும் பெண்கள் தங்களின் ஹிஜாப்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு நான் இவை குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் ஈரான் அதிபர் ரைசியிடம் கேட்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.
இந்தப் பேட்டி அமெரிக்க மண்ணில் ரைசி வழங்கும் முதல் பேட்டியாகும். இதற்காக பல வாரங்கள் திட்டமிட்டப்பட்டு, எட்டு மணி நேரம் உழைத்து மொழிபெயர்ப்பு கருவிகள், லைட்ஸ் கேமரா அனைத்தையும் தயார் செய்து காத்திருந்தோம். ஆனால், அதிபர் ரைசி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
40 நிமிடங்கள் கழித்து அதிபரின் உதவியாளர் ஒருவர் வந்தார். இது முஹரம், சஃபர் ஆகிய புனித மாதங்கள் என்பதால் நான் ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் ரைசி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மிகவும் தன்மையாக அந்த கோரிக்கையை நான் மறுத்து விட்டேன். இது நியூயார்க், இங்கு ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டமோ வழக்கமோ இல்லை என்றும், இதற்கு முன்பு இருந்த எந்த ஈரானிய அதிபரும் ஈரானுக்கு வெளியே நான் அவர்களை பேட்டி எடுத்தபோதும் ஹிஜாப் அணிய வற்புறுத்தியதில்லை என்றும் சுட்டிக்காட்டினேன்.
நான் ஹிஜாப் அணிவில்லை என்றால், இந்த நேர்காணல் சாத்தியம் இல்லை என்று அந்த உதவியாளர் உறுதியாக தெரிவித்தார். மேலும், இது மரியாதை குறித்த விஷயம் என்றும், இது ஈரானின் நிலைமை என்றும் கூறினார்.
முன்பே தெரிவிக்கப்படாத எதிர்பாராத இந்த நிபந்தனையை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தேன்.பின்னர் நாங்கள் வெளியேறிச் சென்றோம். நேர்காணல் நடக்கவில்லை. ஈரானில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து அந்நாட்டு அதிபர் ரைசியிடம் பேச வேண்டிய முக்கியமான தருணமிது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானின் மேற்கில் அமைந்துள்ளது குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) கடந்த 13-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்குச் சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது.
போராட்டத்தில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஈரானில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவைகள் ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அங்கு நிகழும் போராட்டங்களை பகிர முடியாத நிலையில் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Protests are sweeping Iran & women are burning their hijabs after the death last week of Mahsa Amini, following her arrest by the “morality police”. Human rights groups say at least 8 have been killed. Last night, I planned to ask President Raisi about all this and much more. 1/7
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT