Published : 22 Sep 2022 06:26 PM
Last Updated : 22 Sep 2022 06:26 PM

‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ - அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

நியூயார்க்: உலக அளவில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Network Contagion Research Institute) தலைவரும், அதன் இணை நிறுவனருமான ஜோயல் ஃபிங்கள்ஸ்டீன் இது குறித்து கூறுகையில், "இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள், மீம்ஸ் போன்றவை 1000% அதிகரித்துள்ளதைக் காண்கிறோம். வெள்ளை இனத்தவரும், இஸ்லாமியர்களும் இன்னும் பிறரும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.

அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த சில நாட்களாகவே இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. அதேபோன்ற கீழ்த்தரமான விஷயங்கள் தற்போது பிரிட்டனிலும் நடந்துள்ளது. இந்துஃபோபியா என்ற இந்து வெறுப்பு மிகவும் சிக்கலானது. இந்த அபாயகரமான போக்கு அண்மைக்காலமாக வளர்ந்து வருகிறது" என்றார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹேங்க் ஜான்சன் கூறுகையில், “மதங்களுக்கு எதிரான வெறுப்பு துரதிர்ஷ்டவசமானது.

அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக நிறைய வெறுப்புச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்துக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதை மதிக்க வேண்டும். இந்து வெறுப்பு பற்றி பேசுவது மிகவும் சிரமமாக இருக்கிறது” என்றார்.

'இந்துக்கள் பரந்துப்பட்ட சமூகமாக அமெரிக்காவில் வாழ்கின்றனர். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். அமெரிக்க ஜனநாயகக் கொள்கைகளை வளர்ப்பதில் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அமெரிக்க சமூகம் அவர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறது. எஃப்பிஐ தகவலின்படி அமெரிக்காவில் 2020-ல் மட்டும் இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்று கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x