Published : 21 Sep 2022 02:06 PM
Last Updated : 21 Sep 2022 02:06 PM
லண்டன்: “ஒற்றுமையுடன் செயல்படுவோம்” என்று இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகர இந்து - இஸ்லாமிய தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி தோற்கடித்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி லீசெஸ்டர் மாநகரில் மோதல் வெடித்தது. இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து, லீசெஸ்டர் மாநகரில் உள்ள இந்துக்களையும் அவர்களின் வீடு, கடைகள், கோயில்கள் ஆகியவற்றையும் குறிவைத்து பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானியர்கள் தாக்குதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகப் பரவின. பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், அமைதி நிலவ ஒத்துழைப்பு வழங்குமாறும் லீசெஸ்டர் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், வீடியோக்களை பகிரும் முன், அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாகிஸ்தானியர்கள் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. "இந்தியர்களுக்கு எதிராகவும், அவர்களுக்குச் சொந்தமான இடங்கள், கோயில்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இது குறித்து இங்கிலாந்தின் உயர் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்" என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.
இந்நிலையில், லீசெஸ்டர் மாநகரில் உள்ள இந்து - இஸ்லாமிய தலைவர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது: நாங்கள் லீசெஸ்டர் மாநகர குடும்ப உறுப்பினர்கள். நாங்கள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; நாங்கள் சகோதர - சகோதரிகள். எங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அந்நிய தீவிரவாதக் கொள்கைகளுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் லீசெஸ்டர் மாநகரில் இணக்கமாகவே வசித்து வருகிறோம். இந்த மாநகருக்கு நாங்கள் ஒன்றாகவே வந்தோம்; ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொண்டோம்; மாற்று இன வெறுப்பாளர்களை இணைந்தே எதிர்கொண்டோம்; பன்முகத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமையின் கலங்கரை விளக்காக இந்த நகரை இணைந்தே உருவாக்கியுள்ளோம்.
சமீபத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த வேதனையை அளித்துள்ளன. நாகரிக சமூகத்திற்கு இது ஏற்புடையது அல்ல. கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டுத்தலங்களின் புனிதத்தைக் காக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். பிறருக்கு ஆத்திரமூட்டும் வகையில் சத்தமாக இசை இசைக்கப்படுவதையோ, கொடிகள் ஏந்தப்படுவதையோ, தாக்குவதையோ மேற்கொள்ளாமல், சமூக நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT