Published : 16 Sep 2022 08:05 PM
Last Updated : 16 Sep 2022 08:05 PM
சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே, ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இது போருக்கான காலம் அல்ல என தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டி, இது போருக்கான காலம் அல்ல என குறிப்பிட்டார். இது தொடர்பாக ஏற்கனவே தொலைபேசியில் பேசியதைக் குறிப்பிட்ட நரேந்திர மோடி, அமைதி வழியில் முன்னேறுவது எப்படி என்பது குறித்து நேரிலும் பேச தற்போது வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறினார்.
உணவுப் பொருட்கள், எரிபொருள், உரங்கள் ஆகியவற்றின் பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய - ரஷ்ய உறவு குறித்தும் பிற விஷயங்கள் குறித்தும் பலமுறை தொலைபேசி மூலம் விவாதித்திருப்பதை சுட்டிக்காட்டினார். இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு பல பத்தாண்டுகளைக் கடந்து நிலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், உக்ரைனில் உள்ள மோதல்கள் தொடர்பாகன உங்கள் கவலைகளையும், இவ்விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டையும் அறிவேன் என தெரிவித்தார். இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகத் தெரிவித்த புடின், அங்கு என்ன நடக்கிறது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவோம் என்று குறிப்பிட்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த ஆண்டு தலைமையை இந்தியா ஏற்க இருக்கிறது. இதற்கு வாழ்த்து தெரிவித்த புடின், நாளை பிறந்த தினம் கொண்டாட இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க இருப்பதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வாழ்த்து தெரிவித்தார்.
அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பதால், அதில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT