Published : 16 Sep 2022 08:17 PM
Last Updated : 16 Sep 2022 08:17 PM
இஸ்லமாபாத்: நட்பு நாடுகள் கூட பாகிஸ்தானை பிச்சை கேட்கும் நாடாகப் பார்ப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார்.
கனமழை - வெள்ளப் பெருக்கு காரணமாக வரலாறு காணாத இயற்கைப் பேரிடரை பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. வெள்ளப் பெருக்கில் இதுவரை 1,200 பேர் பலியாகியுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 கோடிக்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தினால் சுமார் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நட்பு நாடுகள் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்றும் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதுவரை சவுதி அரேபியா, சீனா, கத்தார், துருக்கி, உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவி புரிந்துள்ளன. பாகிஸ்தானுக்கு 30 மில்லியன் டாலர் நிதி வழங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானின் வழக்கறிஞர்கள் கன்வென்ஷன் நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்போது, “பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவு காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்டதாகும். காலநிலை மாற்றம், மேக பெரு வெடிப்பு, வரலாறு காணாத மழை காரணமாக பாகிஸ்தான் கடல் நீர்போல் காட்சியளித்தது. சிறிய நாடுகள்கூட பொருளாதாரத்தில் பாகிஸ்தானை விஞ்சிவிட்டன. இன்று நட்பு நாடுகளுடன் தொலைபேசியில் பேசும்போது எங்களை பணம் கேட்டு பிச்சை எடுப்பவர்களாகப் பார்க்கிறார்கள். நாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT