Published : 16 Sep 2022 06:45 AM
Last Updated : 16 Sep 2022 06:45 AM
நியூயார்க்: வேறு வேலைக்கு செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு, நோட்டீஸ் காலத்தில் சம்பளத்தை 10 சதவீதம் உயர்த்தி அமெரிக்க நிறுவனம் ஒன்று மகிழ்ச்சியாக வழியனுப்புகிறது.
அமெரிக்காவில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனம் கொரில்லா. இதன் நிறுவனர் ஜான் பிரான்கோ. இவர், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது, வேறு வேலைக்கு செல்ல விரும்பினால், அவர்களது நோட்டீஸ் காலத்தில் சம்பளத்தை 10 சதவீதம் உயர்த்தி அந்த ஊழியர்களை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கிறார். எந்த ஊழியரும் மனக் கசப்புடன் வெளியே செல்லக் கூடாது, மகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த முறையை ஜான் பிரான்கோ பின்பற்றுகிறார்.
இதுகுறித்து ஜான் பிரான்கோ கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் யாராவது வேறு வேலைக்கு செல்ல முடிவு எடுத்தால் குறைந்தது 6 வார கால நோட்டீஸ் கொடுப்பார். 3 மாதத்துக்குள் செல்லும்படி நாங்கள் கூறுவோம். அந்த காலத்தில் அவருக்கு சம்பளத்தை 10 சதவீதம் கூடுதலாக வழங்குவோம். மகிழ்ச்சியாக அவர் வெளியே செல்ல நாங்கள் உறுதி அளிப்போம்.
ஒரு நிறுவனத்தில் வகையாக சிக்கிவிட்டோமே என நினைப்பவர்களுக்கு, எங்களின் இந்த நடவடிக்கை பயனளிக்கும். மேலும், அது அவர்களை வேறு ஏதாவது வித்தியாசமாக செய்ய ஊக்குவிக்கும். அவர்களின் நோட்டீஸ் காலம் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வசதியாக உள்ளது. ஊழியர்கள் எங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை என்றாலும், அவர்கள் எங்களிடம்தான் வேலை பார்த்து ஓய்வு பெற வேண்டும் என எதிர்பார்த்தால் நாங்கள் முட்டாள்கள். ஊழியர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறுவது சுமூகமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் யுக்தி.
சுமூகமாக அனுப்பினோம்
சமீபத்தில் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய திறமையான நபர் ஒருவர், வேறு வேலைக்கு செல்ல தயாரானார். அவர் தனது முடிவை எங்களிடம் தெரிவித்தபோது, நாங்கள் கை கொடுத்து, வாழ்த்து தெரிவித்தோம். அவரது 3 மாத நோட்டீஸ் காலத்தில், சம்பளத்தை 10 சதவீதம் உயர்த்தினோம். அவரது இடத்தை நிரப்ப, வேறு ஒருவரையும் தேர்வு செய்தோம். வெளியேறும் ஊழியருக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன. அவர் சுமூகமாக வெளியேற நாங்கள் உதவுகிறோம்.’’ இவ்வாறு ஜான் பிரான்கோ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT