Published : 12 Sep 2022 09:10 AM
Last Updated : 12 Sep 2022 09:10 AM

அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம்

தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் அனல்மின் நிலையம்

கீவ்: உக்ரைனில் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி மின் விநியோகத்தை தடைப்படச் செய்த ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் இசியம் எனும் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய செய்திகள் வெளியாகின. இது ரஷ்ய போரில் திருப்புமுனை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள அனல் மின் நிலையத்தைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. இது குறித்து உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஷ்ய ராணுவ வீரர்கள் பின்வாங்கிய நிலையில் விரக்தியில் கார்கிவ் அனல் மின் நிலையத்தைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதுபோல் நீரேற்று நிலையங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுள்ளது. உக்ரைன் தனது கிராமங்களையும் நகரங்களையும் மீட்டுவருவதைப் பொறுக்க முடியாமல் முக்கிய கட்டமைப்புகளை நோக்கி ஏவுகணைகளை அனுப்புகிறது. எங்கள் மக்கள் மின்சாரமும், தண்ணீரும் இல்லாமல் தவிக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு என்று கூறியுள்ளார்.இந்நிலையில் மாஸ்கோ இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. திட்டமிட்டு பொதுமக்களை தாக்குவதில்லை என்று கூறியுள்ளது.

மார்ச்சுக்கு பிந்தைய தோல்வி: உக்ரைனில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள ரஷ்யப் படைகள் கடந்த மார்ச் மாதம் கீவ் நகரில் இருந்து பின்வாங்கியது. அதன் பின்னர் இசியம் பகுதியில் இருந்து ரஷ்ய வீரர்கள் ஆயுதங்களைக் கூட கைவிட்டு பின்வாங்கினர். இதுவே மார்ச்சுக்குப் பிந்தைய ரஷ்யாவின் மோசமான பின்னடைவாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் 3000 சதுர கிமீ பரப்பளவை மீட்டுள்ளதாக உக்ரைன் ராணுவ தலைமை கமாண்டர் வலேரி ஜலுஜினி தெரிவித்துள்ளார். தொடர் பின்னடைவுகளை ஏற்க முடியாமல் ரஷ்யா இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுவதாக அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்களை அளித்து அமெரிக்கா உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x