Published : 11 Sep 2022 06:25 AM
Last Updated : 11 Sep 2022 06:25 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கணமழை பெய்து வருகிறது. குறிப்பாக சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் வழக்கத்தைவிட முறையே 784%,500% மழை பதிவாகி உள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வரலாற்றில் மிகவும் மோசமான வெள்ளம் என சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு தொடர்பான விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது. சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், வீடுகள், விவசாய நிலங்கள் ஆகியவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக முன்பு கணிக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.14.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு சர்வதேச நாடுகள் நிதியுதவி செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வெள்ளப்பெருக்கால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலையின்மையும் வறுமையும் பல மடங்கு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா.பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குமாறு உலக நாடுகளுக்கு குத்தேரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT