Published : 10 Sep 2022 03:55 AM
Last Updated : 10 Sep 2022 03:55 AM

70 ஆண்டுகள் இங்கிலாந்து ராணியாக வலம் வந்த எலிசபெத் ராணி மறைவு - 10 நாட்களுக்கு பின் உடல் அடக்கம்

லண்டன்: இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகள் வலம் வந்த இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் 10 நாள் துக்கத்துக்குப் பின்னர் ராணியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணி எலிசபெத் மறைவையடுத்து இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகி உள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த 70 ஆண்டுகாலமாக ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத்(96). முதுமை காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கோடை காலத்தை முன்னிட்டு, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த அவர், இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸை கடந்த 6-ம் தேதி நியமனம் செய்தார். ராணி எலிசபெத் நியமனம் செய்த 15-வது பிரதமர் லிஸ் ட்ரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது எடுக்கப்பட்ட படமே, ராணியின் கடைசி புகைப்படமாகும்.

கடந்த 7-ம் தேதி ராணியின் உடல்நிலை மோசமடைந்து, கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ராணியின் மகன்களான இளவரசர்கள் சார்லஸ், ஆண்ட்ரு, எட்வர்ட், பேரன் வில்லியம் ஆகியோர் பால்மோரல் அரண்மனைக்கு விரைந்தனர். இளவரசர் ஹாரியும் இங்கிலாந்து திரும்பினார்.

இந்நிலையில், ராணி எலிசபெத் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். அவரது உயிர் அமைதியாகப்பிரிந்ததாக லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. ராணியின்மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

10 நாட்களுக்கு பின் உடல் அடக்கம்

ராணி மறைவையொட்டி இங்கிலாந்தில் 10 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதற்குப் பின்னர் ராணி எலிசபெத் உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிறந்த தலைவரை உலகம் இழந்துவிட்டது. ராணி எலிசபெத் 70 ஆண்டுகள் இங்கிலாந்தை வழிநடத்தினர். அவரது குடும்பத்தினருக்கும், இங்கிலாந்து மக்களுக்கும் எனது இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

காந்தி வழங்கிய கைக்குட்டை

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “நமது காலத்தில் வாழ்ந்த,ஒரு வலிமையான தலைவர் ராணிஇரண்டாம் எலிசபெத். இங்கிலாந்துமக்களுக்கு உற்சாகம் அளிக்கும் தலைவராக அவர் திகழ்ந்தவர். பொது வாழ்வில் கண்ணியத்தையும், நேர்மையையும் கடைப்பிடித்தார். அவரது மறைவால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், அவருடைய குடும்பம் மற்றும் பிரிட்டன் மக்களுக்கு எனது இரங்கல்கள். ஒரு சந்திப்பின்போது, அவரது திருமணத்துக்கு மகாத்மா காந்தி பரிசாக வழங்கிய கைக்குட்டையை என்னிடம் காண்பித்தார். அந்த நிகழ்வை என்றென்றும் நினைவில் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

ராணி எலிசபெத் மறைவுயொட்டி இந்தியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அன்று நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் தனது 73 வயதில் இங்கிலாந்து மன்னராகியுள்ளார். இனி அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x