Published : 10 Sep 2022 02:22 AM
Last Updated : 10 Sep 2022 02:22 AM
லண்டன்: ராணி இரண்டாம் எலிசெபத் அணிந்திருந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அடுத்து யாருக்கு செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசெபத் மகாராணி, தனது 96வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். எலிசெபத் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி அறிவிக்கப்பட உள்ளார். அடுத்த மன்னர் யார் என்பது தெளிவாகிவிட்டாலும், ராணி எலிசெபத்தின் விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அடுத்து யாருக்கு செல்ல போகிறது என்பதே கேள்வி.
இதற்கு பதிலாக அனைவரும் கைகாட்டுவது அடுத்த மன்னராக பதவியேற்க போகும் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் பவுல்ஸைதான். பக்கிங்ஹாம் அரண்மனை வரலாற்றை பொறுத்தவரை, கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை பெரும்பாலும் அரசிகளே அணிந்துள்ளனர். அந்த வகையில் மன்னரின் இரண்டாம் மனைவி கமிலா பார்க்கர் பவுல்ஸ்க்கே இந்த கிரீடம் அடுத்துச் செல்லும்.
கமிலா பார்க்கர் புதிய இங்கிலாந்து மன்னரான சார்லஸின் இரண்டாவது மனைவி. சார்லஸின் முதல் மனைவி இளவரசி டயானா 1997 ஆம் ஆண்டு பிரான்சின் தலைநகர் பாரிஸில் கார் விபத்தில் 36 வயதில் இறந்தார். டயானா உயிருடன் இருக்கும்போதே சார்லஸும் கமிலாவும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரமே டயானா பிரித்துச் செல்ல காரணமாக அமைந்தது. 1996ல் விவாகரத்து பெற்றபோது டயானா, தனது விவாகரத்துக்கு கமிலாவையே குற்றம் சாட்டினார். இதன்பின், 2005ல் சார்லஸ் கமிலாவை மணந்தார். இதனிடையே, ராணி எலிசெபத் மரணத்துக்கு பிறகு இங்கிலாந்தின் புதிய ராணியாக செயல்பட இருக்கும் கமிலாவின் தலையை கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அலங்கரிக்க போகிறது.
கோஹினூர் வைரம்: ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வைரம் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்கு கோஹினூர் என்று பெயர் வைத்தனர். தற்போது உலகிலேயே மிகப்பெரிய வைரமாக (105 கேரட்) கோஹினூர் உள்ளது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. கோஹினூர் வைரம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போதைய தெலுங்காவின் வாரங்கலில் உள்ள ஒரு இந்து கோவிலில் தெய்வத்தின் ஒரு கண்ணாக பயன்படுத்தப்பட்டது. மாலிக் கஃபூர் (அலாவுதீன் கில்ஜியின் ஜெனரல்) அதை கொள்ளையடித்தார் என்றும், அதன்பின் முகலாயப் பேரரசின் பல ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு, சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் லாகூரில் அதை வைத்திருந்தார். மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் திலீப் சிங் ஆட்சியின் போது 1849ல் விக்டோரியா மகாராணிக்கு வைரம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இப்போது அந்த வைரம் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது. அந்த கிரீடத்தை ஆண்டுக்கு ஒருமுறை பொது மக்களின் பார்வைக்கு வைக்கின்றனர். இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரத்தை இங்கிலாந்திடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால், கோஹினூர் வைரத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்து அரசு திட்டவட்டமாக கூறியது.
என்றாலும் இந்தியர்கள் தரப்பில் விலைமதிப்புமிக்க இந்த வைரத்தை மீட்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும்நிலையில் கமீலாவின் கிரீடத்தை கோஹினூர் வைரம் அலங்கரிக்கப் போவது உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT