Published : 09 Sep 2022 07:08 PM
Last Updated : 09 Sep 2022 07:08 PM
ஜெனீவா: தற்போதைய நிலை அப்படியே நீடிக்கும் பட்சத்தில், உலக அளவில் பாலின சமத்துவம் முழுமையாக ஏற்பட இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாகுபாடு, வன்முறை, பெண்களை நசுக்கும் பழக்க வழக்கங்கள், பொதுவாழ்வில் பெண்களின் பங்களிப்பை குறைக்கும் அம்சங்கள் என அனைத்து வகையான பாலின சமத்துவமின்மைக்கும் வரும் 2030-க்குள் முற்றுப்புள்ளி வைப்பதற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை ஐ.நா ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா பெண்கள், ஐ.நாவுக்கான பொருளாதாரம் மற்றும் சமூக நலத்துறை ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தின. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில், பாலின சமத்துவத்தை அடைவதற்கான இலக்குகளை எட்டுவதில் உலகம் மிகவும் பின்தங்கியே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், கரோனா பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், பல்வேறு நாடுகளில் நிகழும் மோதல்கள் ஆகியவற்றின் காரணமாக பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாடு மிகவும் அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான பிரச்சினைகள் காரணமாக பெண்களுக்கான கல்வி, சுகாதாரம், வருவாய், பாதுகாப்பு ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதை புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ள ஐ.நா, பெண்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான முதலீடுகளை மேற்கொள்ள இதுவே சரியான தருணம் என தெரிவித்துள்ளது. இல்லாவிட்டால், பெண்களின் நிலை மேலும் மோசமடையும் என்றும் அது எச்சரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்கும், அவர்களுக்கான திருமண உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் உறுதியான சட்டங்கள் தேவை என தெரிவித்துள்ள ஐ.நா, இல்லாவிட்டால், காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கு எதிரான சமூகச் சூழலை மாற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளது. உலகம் இதே வேகத்தில் செல்லுமானால், பெண்களுக்கு சட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு 286 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்துள்ளது.
இதேபோல், பணிபுரியும் இடங்களில் உயர் பொறுப்புகளை அடைவதில் பாலின சமத்துவம் ஏற்பட 140 ஆண்டுகள் ஆகும் என்றும், நாடாளுமன்றங்களில் சமமான பிரதிநிதித்துவத்தைப் பெற 40 ஆண்டுகள் ஆகும் என்றும் ஐ.நா கணித்துள்ளது.
பாலின சமத்துவத்திற்கான இலக்குகள் பலவற்றில் உலக நாடுகள் பின்தங்கி இருந்தாலும், குழந்தைத் திருமண ஒழிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இதில் 17 மடங்கு முன்னேற்றம் பதிவாகி இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பெண்களுக்கு எதிரான வறுமையை ஒழிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா, உலகில் தோராயமாக 38.30 கோடி பெண்கள் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளதாகவும், உணவு, உடை, இருப்பிட வசதி ஆகியவற்றை பெற முடியாத நிலையில் இவர்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது.
பாதுகாப்பான கருக் கலைப்பை மேற்கொள்வதில் ஆண்டுதோறும் 102 கோடி பெண்கள் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ள ஐ.நா, 10.20 கோடி பெண்கள் கருக் கலைப்பு செய்து கொள்ள தடை விதிக்கப்பட்ட நாடுகளில் வசிப்பதாக கூறியுள்ளது.
பல்வேறு நாடுகளில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக, உலகில் 54% பெண்கள் முறையான கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா, சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லாததால் ஆண்டுதோறும் 8 லட்சம் பெண்கள் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT