Published : 09 Sep 2022 11:35 AM
Last Updated : 09 Sep 2022 11:35 AM
சென்னை: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இந்திய திரைத்துறையின் உச்ச நடிகரான கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்திருந்தார். இதில் மருதநாயகம் படத்தையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் அரசாட்சியில் 70 ஆண்டுகள் 214 நாட்கள் ராணியாக அரியணையில் ஆட்சி செய்தவர் எலிசபெத். 96 வயதை நிறைவு செய்தவர். அவர் நேற்று காலமானார். உலகமே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளன. அதில் ஒருவராக கமல்ஹாசன் இணைந்துள்ளார்.
“எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT