Published : 09 Sep 2022 05:49 AM
Last Updated : 09 Sep 2022 05:49 AM
அமெரிக்கா: நடப்பாண்டில் இதுவரை 82,000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எப்1 மற்றும் எம்1 ஆகிய விசாக்கள் வழங்கப்படுகின்றன. பட்டப்படிப்பு, உயர் படிப்புக்கு எப்1 விசாவும் தொழிற்கல்விக்கு எம்1 விசாவும் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் டெல்லி, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அமெரிக்க தூதரகங்கள் செயல்படுகின்றன. இந்த தூதரகங்கள் மூலம் நடப்பாண்டில் இதுவரை 82,000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டு மாணவர்களில் அதிகபட்சமாக இந்திய மாணவர்களுக்கே அதிக விசா வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய மாணவர்கள் முக்கிய பங்கு அளித்து வருகின்றனர். சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் முன்னணியில் உள்ளன.
அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 20 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் ஆவர். கடந்த 2020-2021-ம் கல்வியாண்டில் மட்டும் 1,67,582 இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயில்வதற்கு விசா பெறுவதில் சீனா முதலிடத்தில் இருந்தது. தற்போது சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.
எனினும் அமெரிக்காவில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தென்கொரியா 2-வது இடத்திலும் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT