Published : 06 Sep 2022 08:53 AM
Last Updated : 06 Sep 2022 08:53 AM
கொழும்பு: இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து அந்நாட்டின் மிகப்பெரிய இன சிறுபான்மையினரான தமிழர்கள் பாதுகாப்புக்காக தமிழகம் வரத்தொடங்கினர். இலங்கை தமிழர்களில் சுமார் 12 சதவீதம் பேர் தென்னிந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அங்குள்ள தமிழர்கள் சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாகவும் இலங்கை தமிழர்களின் மீள்குடியேற்றத்தை திறம்பட மேற்கொள்ளவும் குழு ஒன்றை இலங்கை அதிபரின் செயலாளர் சாமன் ஏகநாயக நியமித்துள்ளார். ஈழம் அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் குடியேற்றத்துறை, நீதித்துறை வெளியுறவுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை பதிவாளர் ஜெனரல் துறையின் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இதற்கான நடவடிக்கையை ஒருங்கிணைக்க உள்ளது.
இதுகுறித்து இலங்கை அதிபர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையை சேர்ந்த சுமார் 58 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் தற்போது அகதிகளாக வசிக்கின்றனர். இவர்களில் 3,800 மட்டுமே தற்போது இலங்கை திரும்ப தயாராக உள்ளனர்” என்று கூறியுள்ளது.
2021-ம் ஆண்டு, இந்திய உள்துறை அமைச்சக ஆவணங்களின்படி தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் இலங்கை தமிழர்கள் 58,843 பேர் வசிக்கின்றனர்.
மேலும் சுமார் 34,000 பேர் முகாம்களுக்கு வெளியே வசிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT