Published : 03 Sep 2022 05:56 AM
Last Updated : 03 Sep 2022 05:56 AM

இலங்கை திரும்பினார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச

கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை தாய்நாடு திரும்பினார்.

இதுகுறித்து இலங்கை அரசு வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை போராட்டங்களின் போது இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் 3-ம் தேதி மீண்டும் இலங்கை திரும்ப உள்ளார். தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு இலங்கை வரும் அவர் கொழும்புவின் கிழக்குப் புறநகர் பகுதி மிரி ஹானாவில் அமைந்துள்ள தனது வீட்டில் தங்குவாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

மேலும், கோத்தபய ராஜபக்ச வரும் விமானத்தின் விவரங்களும் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட மக்களின் எழுச்சிப் போராட்டத்தின் விளைவாக கோத்தபய ராஜபக்ச (73)கடந்த ஜூலை 13-ம் தேதி இலங்கையில் இருந்து வெளியேறினார்.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் முதலில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கு சில நாட்கள் மட்டுமே தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று தனது அதிபர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை ஜூலை 14-இல் அனுப்பி வைத்தார். இதற்கிடையில், கோத்தபய ராஜபக்சநீண்ட காலம் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசு அனுமதி மறுத்தது.அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டது.

அதன் பின்னர் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்ற கோத்தபய ராஜபக்ச தற்காலிகமாக அடைக்கலம் கோரினார். ஆனால், கோத்தபய ராஜபக்ச சட்டப்பூர்வமான பாஸ்போர்ட் வைத்திருப்பதால் அவர் 90 நாட்கள் வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தங்கலாம் என தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டான் பிரமுதிவினய் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று கோத்தபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்புகிறார்.

இதனிடையே, இன்று அதிகாலை கோத்தபய நாடு திரும்பினார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஐஎம்எப் நிதியுதவி

இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) ரூ.23 ஆயிரம் கோடி நிதியுதவியை நிபந்தனைகள் அடிப்படையில் வழங்க முன்வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x