Published : 02 Sep 2022 05:00 AM
Last Updated : 02 Sep 2022 05:00 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் தேனீக்களால் 20,000 முறை கொட்டப்பட்ட இளைஞர் கோமா நிலைக்கு சென்றார். ஒரு வாரத்துக்குப் பிறகு கோமாவில் இருந்து அவர் மீண்டுள்ளார்.
அமெரிக்காவின் ஒகையோ மாகாணம், ரிப்ளி பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் (20). கடந்த வாரம் இவர் தனது வீட்டு தோட்டத்தில் எலுமிச்சை மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த மரத்தில் இருந்த மிகப்பெரிய தேனீ கூடு கலைந்தது. ஆயிரக்கணக்கான தேனீக்கள் ஆஸ்டினை சூழ்ந்து கொட்டின. சுமார் 20,000 முறை தேனீக்களால் கொட்டப்பட்டதால் மயங்கி விழுந்தார்.
மரம் வெட்டும் போது ஆஸ்டினின் தாய், தாத்தா, பாட்டியும் அதை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்டினை மீட்டு சின்சினாட்டி மருத்துவ மையத்தில் சேர்த்தனர். அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், மீண்டும் நினைவு திரும்புவது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் ஒரு வாரம் கழிந்த நிலையில் நேற்று முன்தினம் கோமாவில் இருந்து அவர் மீண்டார்.
இதுகுறித்து ஆஸ்டினின் தாயார் ஷாவ்னா கார்டன் கூறியதாவது:
எங்கள் வீட்டு எலுமிச்சை மரத்தில் ஆப்பிரிக்க தேனீக்களின் கூடு இருந்தது. கூடு இருந்த கிளையை எனது மகன் வெட்டியபோது தேனீக்கள் அவனை தாக்கின. அவை கொடிய விஷம் கொண்டவை. அவற்றில் விஷத்தால் எனது மகன் மயங்கினான்.
அவனது உடலின் பல பகுதிகளில் தேனீக்கள் இருந்தன. மருத்துவர்கள் அவற்றை அகற்றி வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்தனர். கோமா நிலைக்கு சென்ற எனது மகனுக்கு சிறுநீரக பாதிப்பு, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. எனினும் மருத்துவர்களின் அயராத முயற்சியால் கோமாவில் இருந்து எனது மகன் மீண்டுவிட்டான். அவனது சிகிச்சைக்காக பலரும் பணம் அளித்தனர். இதுவரை ரூ.8 லட்சம் கிடைத்திருக்கிறது. மருத்துவர்களுக்கும் பணம் அளித்து உதவிய நன்கொடையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT