Published : 30 Aug 2022 02:45 PM
Last Updated : 30 Aug 2022 02:45 PM
அக்ரா: கானாவில் உயிரியல் பூங்கா ஒன்றில் தனது குட்டிகளை திருட முயன்ற நபரை சிங்கம் ஒன்று கொன்ற நிகழ்வு நடந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான கானாவில் உள்ளது அக்ரா உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் திங்கட்கிழமை அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது .அங்குள்ள சிங்கம் ஒன்று கடந்த ஆண்டு இறுதியில் இரண்டு வெள்ளை சிங்கக் குட்டிகளை ஈன்றது. இந்த நிலையில் அந்தக் குட்டிகளை திருடும் முயற்சியில்தான் சிங்கம் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்,
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில், “பாதுகாப்புப் பகுதியை தாண்டிய அந்த நபர் வெள்ளை சிங்கக் குட்டிகள் இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார்.இதனை கவனித்த தாய் சிங்கம் அந்த நபரை கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் உயிரிழந்திருக்கிறார். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பூங்காவில் சிங்கம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கானாவின் இயற்கை வள பாதுகாப்பு அமைச்சர் பெனிட்டோ கூறும்போது, “தனது குட்டிகளை காப்பாற்றுவதற்கு சிங்கம் இவ்வாறு செய்திருக்கலாம். தற்காலிகமாக பூங்காவுக்கு பொதுமக்கள் வருவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் இம்மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
எனினும் சிங்கம் பசியின் காரணமாகவே அந்த நபரைக் கொன்றதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT