Published : 30 Aug 2022 12:59 PM
Last Updated : 30 Aug 2022 12:59 PM
அமேசான்: பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் கடந்த 26 ஆண்டுகளாக தனியாக வசித்துவந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண் உயிரிழந்திருக்கிறார்.
1970கள் - 1980களில் ஏஜென்ட்டுகள், நிலப்பிரபுக்கள் அமேசான் பகுதியிலிருந்த பழங்குடியினரைக் கொன்று குவித்தனர். எஞ்சியவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
அப்படி விரட்டப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிருடன் தப்பித்தார். அதனைத் தொடர்ந்து பொலிவியாவின் எல்லையான ரொண்டோனியா மாகாணத்தில் உள்ள தனாரு பூர்வீகப் பகுதியில் இவர் வசித்து வந்தார்.
அவர் எந்த பழங்குடி இனத்தை சேர்ந்தவர், அவர் எந்த மொழியைப் பேசினார் என்ற தகவலை இதுவரை யாராலும் அறியமுடியவில்லை.
ஆனாலும் தனிமையில் தொடர்ந்து அமேசானில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரை 1996 ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் செயல்பட்டு வரும் ஃபுனாய் என்ற அமைப்பு கடந்த 26 ஆண்டுகளாக கண்காணித்து தொடர்ந்து வீடியோ எடுத்து வந்தது.
கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு காட்டின் புதர் ஒன்றிலிருந்து அந்த நபர் எட்டி பார்க்கும் புகைப்படங்கள்,வீடியோ வெளியாகின.
நீண்ட முடியுடன், மிக திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்த அந்த மனிதர் பன்றி, குரங்குகள், பறவைகளை தனது அம்பைக் கொண்டு வேட்டையாடி உண்டு வருவதாக ஃபுனாய் அமைப்புக் கூறியது.
தனது பழங்குடி மக்களை பிற மனிதர்கள் கொன்றதால் அவர் தொடர்ந்து மன ரீதியான அழுத்தத்தில் இருந்ததால் குழுவாக வாழும் சமூகத்திடம் இணைந்து வாழ அந்தப் பழங்குடி மனிதர் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் அந்த பழங்குடி நபர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது மரணம் குறித்து பழங்குடி நிபுணர் மார்செலோ டோஸ் சாண்டோஸ் கூறுகையில்,” அவர் இறக்கப் போகிறார் என்பதை அறிந்து, அவர் தன் மீதே இறகுகளை வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய மரணத்துக்காக காத்திருந்திருக்கிறார். அவர் உடலில் எந்தக் காயமும் இல்லை. அவர் 40 - முதல் 50 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.
அமேசான் காடுகள் வன அழிப்பினாலும், கால நிலை மாற்றத்தாலும் கடுமையான விளைவை சந்தித்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என பழங்குடி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...