Published : 29 Aug 2022 08:17 AM
Last Updated : 29 Aug 2022 08:17 AM
லண்டன்: பிரிட்டிஷ் இளவரசி டயானா பயன்படுத்திய கார் ரூ.6.92 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
பிரிட்டனின் பிரபுக்கள் பரம்பரையின் ஸ்பென்சர் குடும்பத்தை சேர்ந்த டயானா கடந்த 1981-ம் ஆண்டில் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1996-ம் ஆண்டில் சார்லஸுடன் விவாகரத்து ஏற்பட்டது. கடந்த 1997 ஆகஸ்ட் 31-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பட்ட கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்.
கடந்த 1985 முதல் 1988-ம் ஆண்டு வரை ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ வகையை சேர்ந்த காரை அவர் பயன்படுத்தினார். கடந்த 2008-ம் ஆண்டில் அந்த காரை தொழிலதிபர் ஒருவர் வாங்கினார். டயானாவின் 25-வது ஆண்டு நினைவு தினம் வரும் 31-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
இந்த நேரத்தில் அவர் பயன்படுத்திய ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ காரை சில்வர்ஸ்டோன் நிறுவனம் நேற்று முன்தினம் ஏலம் விட்டது.
பிரிட்டனின் வார்விஷைர் நகரில் ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் காரின் ஆரம்ப விலையாக ரூ.90,000 நிர்ணயிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்தும் பலர் ஏலத்தில் பங்கேற்றனர்.
இறுதியில் பிரிட்டனை சேர்ந்த ஒருவர் ரூ.6.92 கோடிக்கு ஏலம் எடுத்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரத்தை ஏல நிறுவனம் வெளியிடவில்லை.
இதுகுறித்து ஏல நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது. கடந்த 1985-வது ஆண்டு ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ காரை இளவரசி டயானா வாங்கினார். அப்போது காரின் விலை ரூ.7.8 லட்சமாகும். இந்த கார் மணிக்கு 124 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். டயானாவுக்காக காரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 25,000 மைல்கள் மட்டுமே கார் ஓடியுள்ளது.
ஏலத்தில் துபாய் மற்றும் பிரிட் டனை சேர்ந்தவர்கள் இடையே கடுமையான போட்டி இருந்தது. இறுதியில் பிரிட்டிஷ்காரர் காரை ஏலத்தில் எடுத்தார். இளவரசி டயானா பயன்படுத்திய கார் என்பதால் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஏல நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT