Published : 24 Oct 2016 08:40 PM
Last Updated : 24 Oct 2016 08:40 PM
பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் தொடர்பான தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் லண்டன் பிரதிநிதிகள் சார்பில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பிடம் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு பொருளாதார மற்றும் மனித உயிர் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், காஷ்மீர் பகுதியை வலுக்கட்டாயமாக கைப்பற்ற வேண்டும் என்ற பிடிவாதத்தை பாகிஸ்தான் இன்னமும் கைவிட மறுப்பது வருத்தமளிக்கிறது.
ஏகாதிபத்திய இயல்புடன் கூடிய இந்த கொள்கையின் அடிப்படைகளை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்தாக வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனை பாகிஸ்தான் உண்மையாக விரும்புவதாக இருந்தால், தீவிரவாதம், பயங்கரவாதம், மத சகிப்பின்மை மற்றும் வெறுப்புணர்வை பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஊக்குவிப்பதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மாறாக, ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்கித் பாலிஸ்தான் என்றழைக்கப்படும் உங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கு முழு அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு இணையானவர்கள் இல்லை என நீங்கள் இன்னமும் எண்ணியிருந்தால், குறைந்தபட்சம் எங்களை ஒரு மனிதர்களாக வாழ விடுங்கள்.
நீதி, நேர்மையை இஸ்லாம் கண்டிப்பாக கடைப்பிடிக்கக் கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தான், தன் நாட்டுடன் காஷ்மீரின் மகாராஜா ஹரி சிங் ஏற்படுத்திக் கொண்ட உடன் படிக்கையை அப்பட்டமாக மீறி வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘மனித உயிர்களை காப்பதற்கும், பெண்கள் மற்றும் முதியோரின் கவுரவத்தை பாதுகாக்க வேண்டியதற்கும், இஸ்லாம் மதம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், 1947-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி எனது தாயகமான ஜம்மு காஷ்மீரை தாக்கியவர்கள், எங்கள் நகரங்கள், கிராமங்கள் மற்றும் அப்பாவி மக்களை சூறையாடியதும், வீடு, கடைகளை எரித்து நாசமாக்கியதும், பெண்களை கற்பழித்ததும் மிகுந்த வருத்தம் அளித்தது. அதோடு, இவற்றையெல்லாம், அவர்கள் இஸ்லாம் மற்றும் ஜிகாத்தின் பெயரில் செய்தது மேலும் வலியை ஏற்படுத்தியது என, மகாராஜா ஹரிசிங் கூறியதும், அக்கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
காஷ்மீர் தேசிய கட்சி, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியினர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT