Published : 25 Aug 2022 03:47 PM
Last Updated : 25 Aug 2022 03:47 PM
பெர்லின்: சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். அத்தகைய முன்னெடுப்பில்தான் ஜெர்மனி இறங்கியுள்ளது. ஆம், உலகிலேயே ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பயணிகள் ரயில் சேவையை முதல்முறையாக ஜொ்மனி தொடங்கியுள்ளது. ஜெர்மனியின் லோயர் சாக்சோனியில் புதன்கிழமை அத்திட்டம் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து லோயர் சாக்சோனியில் இயங்கி வந்த 14 டீசல் ரயில்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அல்ஸ்டாம் நிறுவனம், எல்பே-வெசர் ரயில்வே ஆகியவை இணைந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்யாத இந்த வகை ரயில்களை உருவாக்கியுள்ளன.
ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்களை தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான அல்ஸ்டாம் கூறும்போது, "ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் திட்டம் ஒரு முன்மாதிரியான திட்டம். இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சோதனை ஓட்டங்களுக்கு பின் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 5 ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு 92.3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.737 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. நாம் தற்போது பயன்படுத்தும் ரயில்களுடன் ஒப்பிடுகையில் இந்த ரயில்கள் மூலமாக கார்பன் உமிழ்வு ஆண்டுக்கு 4,400 டன்கள் அளவில் குறையும்.
இந்த ரயில் மணிக்கு 140 கி.மீ.வேகத்தில் செல்லும். தற்போது நாம் பயன்படுத்தும் ரயிலுக்கு 4.5 கிலோ டீசல் தேவைப்படும். அதேநேரத்தில் ஹைட்ரஜன் ரயில்களுக்கு சுமார் ஒரு கிலோ அளவிலான ஹைட்ரஜனே தேவைப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் 6 மாகாணங்களில் இந்த ஹைட்ரஜன் ரயில் பயணம் செய்ய உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT